தமிழக சட்டப்பேரவை தேர்தல் – இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை!

Estimated read time 1 min read

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று எண்ணப்படுகின்றன.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த மாதம் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, திமுக கூட்டணி, விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவும் நிலையில், நான்காயிரத்து 23 வேட்பாளர்கள் களம் கண்ட இந்த தேர்தலில், தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக 85 சதவிகித வாக்குகள் பதிவாகின.

இந்த சூழலில் 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு 62 மையங்களில் எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகளும், பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட உள்ளன.வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலும், ECINET மற்றும் Voter Helpline என்ற செயலிகள் மூலமும் உடனுக்குடன் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே வாக்கு எண்ணிக்கைப் பணியில் 10 ஆயிரத்து 545 பேர் ஈடுபட உள்ளதாகவும், 234 தொகுதிகளுக்கும் தலா ஒருவர் என, 234 வாக்கு எண்ணும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் 75 கம்பெனி துணை ராணுவப் படையினரைக் கொண்டு மூன்றடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. சென்னையில் 20 ஆயிரம் பேர் உள்பட தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

காலை 9 மணி முதல் முன்னிலை நிலவரங்கள் தெரியவரும் என்பதால், தமிழகத்தில் யார் ஆட்சியை பிடிக்க போகிறார்கள் என்பது நாளை பிற்பகலுக்குள் தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author