தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயல் திறனைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) ஆதரவளித்த வாக்காளர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதிலும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்தப் பதிவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் களம் குறித்துக் குறிப்பிட்ட பிரதமர், “தங்களது ஈர்க்கக்கூடிய சிறப்பான செயல்பாட்டிற்காக தமிழக வெற்றிக் கழகத்திற்கு எனது பாராட்டுகள். தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் நலனுக்காகவும் மத்திய அரசு தொடர்ந்து அயராது பாடுபடும்,” என்று பதிவிட்டுள்ளார். அரசியலில் களம் கண்டு முதல் தேர்தலிலேயே பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தவெக செயல்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
