தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத இழுபறி நிலை நீடிப்பதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, எந்தக் கட்சியும் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களைப் பிடிக்க முடியாத சூழல் நிலவுவதால், அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து அதிகாரிகளிடையே பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய சூழல் குறித்து தமிழக உயரதிகாரிகள் நாளை முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளனர். குறிப்பாக, மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கு சீர்குலையாமல் இருப்பதை உறுதி செய்யவும், அமைதியைப் பேணவும் விரிவான திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடுத்தகட்ட நிர்வாக நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத “தொங்கு சட்டசபை” அமைய வாய்ப்புள்ளதாகக் கருதப்படுவதால், ஆளுநரின் முடிவுகள் மற்றும் அரசியல் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து வரும் அதிகாரிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
தமிழக அரசியல் வரலாற்றில் இந்தத் தேர்தல் முடிவுகள் ஒரு இக்கட்டான மற்றும் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளன.
