வடகொரியா தனது கிழக்குக் கடற்கரையிலிருந்து, புதிய நீர்மூழ்கிக் கப்பல் மூலம் க்ரூஸ் ஏவுகணை சோதனை நடத்தியதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு சர்வதேச நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அமெரிக்கா, தென்கொரியா இணைந்து பல்வேறு தடைகளை விதித்த போதிலும், வடகொரியா அதைக் கண்டுக் கொள்ளாமல், தொடர்ந்து, ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது.
இந்நிலையில், நேற்று தனது புதிய நீர்மூழ்கிக் கப்பல் மூலம், “புல்வாசல்-3-31” (Pulhwasal-3-31) என்று பெயரிடப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளது. அந்நாட்டு அதிபர் கிம்ஜாங் உன் மேற்பார்வையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. ஒரே வாரத்தில் இரண்டாவது ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தி உள்ளது.
வடகொரியாவின் கிழக்குக் கடற்கரையிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை, கடலுக்கு மேலே பறந்து இலக்காக நிர்ணயிக்கப்பட்ட பெயர் குறிப்பிடப்படாத தீவை தாக்கியது. இந்த ஏவுகணை சுமார் 7 ஆயிரத்து 400 வினாடிகள் பறந்து சென்று இலக்கை தாக்கியது. வடகொரியா தனது ஆயுத பலத்தை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.