தமிழக அரசியல் வானில் ஒரு புதிய சூரியனாக உதயமான “தளபதி” விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் நிகழ்த்தியுள்ள அசுர சாதனை, இந்திய அரசியலையே அதிர வைத்துள்ளது.
திரையுலகில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்து, கட்சி தொடங்கிய மிகக்குறுகிய காலத்திலேயே ஆட்சிக் கட்டிலைப் பிடித்து, மறைந்த மாபெரும் தலைவர்களான எம்.ஜி.ஆர் மற்றும் என்.டி.ஆர் ஆகியோரின் வரலாற்றுச் சாதனைகளை விஜய் தற்போது கண்முன் நிறுத்தியுள்ளார்.
1972-ல் அதிமுக-வைத் தொடங்கி 4 ஆண்டுகள் காத்திருந்து 1977-ல் ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆரின் நிதானமான வெற்றியையும், 1982-ல் கட்சி தொடங்கி வெறும் 9 மாதங்களிலேயே ஆந்திராவின் அரியணையைத் தட்டிப்பறித்த என்.டி.ஆரின் மின்னல் வேகப் பாய்ச்சலையும் விஜய்யின் இந்த எழுச்சி ஒருங்கே பிரதிபலிக்கிறது.
பல தசாப்தங்களாகத் தமிழகத்தை ஆண்டு வந்த திராவிடக் கட்சிகளின் ஏகபோக ஆதிக்கத்தைத் தகர்த்து, ஒரு புதிய அரசியல் சகாப்தத்தைத் தொடங்கி வைத்துள்ள விஜய்யின் இந்த விஸ்வரூபம், “சினிமா கூட்டம் ஓட்டாக மாறாது” என்ற விமர்சனங்களைத் தவிடு பொடியாக்கி, இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்பமாக மாறியுள்ளது.
எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஒரு சினிமா நட்சத்திரம், மாநில அளவில் இவ்வளவு பெரிய வாக்கு வங்கியைத் தன்வசப்படுத்தி, முதல் தேர்தலிலேயே முதலிடத்தைப் பிடித்திருப்பது இதுவே முதல்முறை என்பதால், அரசியல் விமர்சகர்கள் இதனை “விஜய் சுனாமி” என்றே வர்ணிக்கின்றனர்.
ஆந்திராவில் என்.டி.ஆர் நிகழ்த்திய அந்த மேஜிக்கைத் தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப மார்டனாகச் செய்து காட்டியுள்ள விஜய், கோட்டையை நோக்கித் தனது வெற்றி நடையைத் தொடங்கியுள்ளார்.
