
சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ல் 233 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 34.92% வாக்குகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில், ஆளுநர் தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. தவெகவின் சட்டப்பேரவைக் குழு தலைவராக விஜய் தேர்ந்தெடுக்கப்படுவார். அதன் பிறகு, ஆளுநர் மாளிகையில் அவருக்கு முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும்.ஆனால் தவெகவுக்கு தற்போது பெரும்பான்மை (118 இடங்கள்) இல்லாத நிலையில், ஆளுநர் அவருக்கு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கி, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கோருவார்.
அந்த அவகாசத்திற்குள் விஜய், திமுக அல்லது அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் அல்லது நேரடியாக அதிமுகவிடம் ஆதரவு கோரி பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.தவெக தனித்துப் போட்டியிட்டதால், எந்தக் கூட்டணியிலும் இணையாமல் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
எனவே, ஆட்சி அமைக்க ஆதரவு தேவைப்படும் இந்தச் சூழலில், அரசியல் கூட்டணி உருவாக்கம் குறித்து அடுத்த சில நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள விஜய்யின் அடுத்த நகர்வுகள், தமிழ்நாட்டின் அரசியல் சமன்பாட்டை முழுமையாக மாற்றியமைக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மக்கள் வாக்களித்த மாற்றத்தின் அடுத்த கட்டம் இப்போது தொடங்கியுள்ளது.
