தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை உடனடியாக ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு அவர் விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது, நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஜனநாயக முறைப்படி, ஒரு மாநிலத்தில் எந்தக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதோ, அந்தப் கட்சியின் தலைவரைத்தான் ஆட்சி அமைக்க ஆளுநர் முதலில் அழைக்க வேண்டும்.
மக்களின் தீர்ப்பு தவெக-வுக்கு ஆதரவாக உள்ள நிலையில், ஆளுநர் எந்தவித தாமதமும் இன்றி விஜய்க்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும். மக்கள் வழங்கிய இந்தத் தீர்ப்பை மதித்து ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒருவேளை, இதில் பாரபட்சம் காட்டப்பட்டாலோ அல்லது காலதாமதம் செய்யப்பட்டாலோ, இந்த விவகாரத்தில் சட்ட ரீதியான தீர்வை காண நான் நீதிமன்றத்தை அணுக நேரிடும். இவ்வாறு சுப்பிரமணிய சுவாமி தனது அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மைக்குச் சில இடங்கள் குறைவாக இருக்கும் சூழலில், தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் விஜய்க்கு ஆதரவாக சுப்பிரமணிய சுவாமி குரல் கொடுத்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
