12-லிருந்து 23 ஆக உயர்ந்த எண்ணிக்கை! தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வாகியுள்ள 23 பெண் பிரதிநிதிகள்..!

Estimated read time 1 min read

108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் 13 பெண்கள் வெற்றிபெற்று எம்.எல்.ஏ.க்கள் ஆகி உள்ளனர். அ.தி.மு.க.வின் 47 எம்.எல்.ஏ.க்களில் 6 பேர் பெண்கள். 59 இடங்களைப் பெற்று சட்டமன்றத்தில் 2-வது பெரிய கட்சியாக உள்ள தி.மு.க. தேர்தலின்போது 19 பெண் வேட்பாளர்களை நிறுத்திய போதிலும் ஒரு பெண் எம்.எல்.ஏ. கூட அந்த கட்சிக்கு கிடைக்கவில்லை.

காங்கிரஸ், பா.ம.க, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி, தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளில் தலா ஒரு பெண் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

தற்போது பெண் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, தமிழ்நாட்டில் சுமார் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 2.93 கோடி பேர் பெண்கள். இது மொத்த வாக்காளர்களில் 51 சதவீதமாகும்.

தேர்தலில் பதிவான 4.87 கோடி வாக்குகளில், ஏறத்தாழ 2.52 கோடி வாக்குகள் பெண் வாக்காளர்களால் அளிக்கப்பட்டன. தேர்தல் பிரசாரத்தின்போது அரசியல் கட்சிகள் பெண்களை மையமாகக் கொண்ட நலத்திட்ட வாக்குறுதிகளில் அதிக கவனம் செலுத்திய போதிலும், வேட்பாளர் தேர்வில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே இருந்தது. தேர்தலில் போட்டியிட்ட 4,023 வேட்பாளர்களில், 443 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்களாக இருந்தனர்.

தி.மு.க. கூட்டணி 26 பெண் வேட்பாளர்களையும், அ.தி.மு.க. 29 பெண் வேட்பாளர்களையும், த.வெ.க. 23 பெண் வேட்பாளர்களையும் களமிறக்கின. நாம் தமிழர் கட்சி அதிகபட்சமாக 117 பெண் வேட்பாளர்களைக் களமிறக்கியது. இருப்பினும் 23 பெண்களே வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்கள் ஆகி உள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உட்பட 21 பெண் எம்.எல்.ஏ.க்கள் அவையில் இடம்பெற்றிருந்தனர். தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே அதிகபட்ச பெண் பிரதிநிதித்துவம் 1991-ம் ஆண்டில் இருந்தது. அப்போது 32 பெண் எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டசபையில் கிட்டத்தட்ட 13 சதவீத இடத்தைப் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author