புனித ரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ரமலான் பண்டிகை இன்று நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய பெருமக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரமலான் பண்டிகையையொட்டி, நாட்டின் முக்கியத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் ஈதுல் பித்ர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பண்டிகை புனித ரமலான் மாதத்தில் நோன்பின் நிறைவைக் குறிக்கிறது. இது அன்பு மற்றும் சகோதரத்துவத்தின் செய்தியை நமக்கு வழங்குகிறது. இந்தப் பண்டிகை ஒற்றுமை, மன்னிப்பு, தொண்டு ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.
ஏழைகள் மற்றும் உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கும், அவர்களுடன் நமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதற்கும் இந்த பண்டிகை ஒரு சந்தர்ப்பமாகும். இந்தப் பண்டிகை அமைதியான வாழ்க்கையை வாழவும், சமூகத்தின் வளத்திற்காகப் பணியாற்றவும் நம்மை ஊக்குவிக்கிறது. இந்த பண்டிகையின் புனித சந்தர்ப்பத்தில், அன்பு, கருணை மற்றும் இரக்கம் போன்ற உணர்வுகளைப் பரப்புவோம்” என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல், குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கரும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஈதுல் பித்ர் திருநாளில் மனமார்ந்த வாழ்த்துக்கள். இது ஒற்றுமையின் உணர்வைக் குறிக்கிறது. இந்த பண்டிகை இரக்கம், பெருந்தன்மை மற்றும் சகோதரத்துவத்தின் மதிப்புகளை நமக்கு நினைவூட்டுகிறது. இந்த பண்டிகை அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும், ஆசீர்வாதங்களையும் தரட்டும் என்று கூறப்பட்டுள்ளது.