நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையான18 நாட்களில் 14 அமர்வுகள் நடைபெற்றன.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
2023 டிசம்பர் 4-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் 2023, டிசம்பர் 21 அன்று ஒத்திவைக்கப்பட்டது. இந்தக் கூட்டத் தொடர் 18 நாட்களில் 14 அமர்வுகளைக் கொண்டிருந்தது.
கூட்டத்தொடரின் போது மக்களவையில் 18 மசோதாக்களும் மாநிலங்களவையில் 17 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. மக்களவையின் அனுமதியுடன் 3 மசோதாக்களும், மாநிலங்களவையின் அனுமதியுடன் ஒரு மசோதாவும் திரும்பப் பெறப்பட்டன. இந்தக் கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 19 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தொடரின் போது, 2023-24 ஆம் ஆண்டிற்கான துணை மானியக் கோரிக்கைகள் மற்றும் 2020-21 ஆம் ஆண்டிற்கான கூடுதல் மானியக் கோரிக்கைகள் முழுமையாக விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
தொடர்புடைய நிதி ஒதுக்கீட்டு மசோதாக்கள் 12.12.2023 அன்று மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டு, 05 மணி 40 நிமிட நேர விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டன. சுமார் 22 நிமிட விவாதத்திற்குப் பிறகு மாநிலங்களவை 19.12.2023 அன்று இந்த மசோதாக்களை திருப்பி அனுப்பியது.
பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட நீதியை உறுதி செய்வதற்கான குற்றவியல் நீதி அமைப்பு தொடர்பான மூன்று முக்கிய மசோதாக்களான இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973, இந்திய சாட்சியச் சட்டம், 1872 ஆகியவற்றுக்குப் பதிலாக இந்திய குடிமைப் பாதுகாப்பு சட்டம், 2023, இந்திய நீதித்துறைச் சட்டம், 2023, இந்திய சாட்சிய சட்டம், 2023 ஆகியவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தொடரின் போது இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய மசோதாக்கள் பின்வருமாறு:
வழக்கறிஞர்கள் (திருத்த) மசோதா, 2023.
ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு (திருத்த) மசோதா, 2023.
ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா, 2023.
மத்திய பல்கலைக்கழகங்கள் (திருத்த) மசோதா, 2023
ரத்து மற்றும் திருத்த மசோதா, 2023
டெல்லி சட்டங்களின் தேசிய தலைநகரப் பகுதி சட்டங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) இரண்டாவது (திருத்த) மசோதா, 2023.
தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) மசோதா, 2023
பத்திரிகைகள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா, 2023.
தொலைத்தொடர்பு மசோதா, 2023
மாநிலங்களவையில், விதி எண் 176-ன் கீழ் நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் தொடங்கி 10 மணி நேரம் 25 நிமிடங்களுக்கும் மேலாக ஒரு குறுகிய கால விவாதம் நடைபெற்றது.
மக்களவையின் அலுவல்கள் தோராயமாக 74% ஆகவும், மாநிலங்களவையின் அலுவல்கள் தோராயமாக 79% ஆகவும் இருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.