டெல்லியில் மாறும் கணக்கு..!” – திமுக எம்பிக்களை குறிவைக்கும் பாஜக..

Estimated read time 1 min read

தமிழ்நாட்டின் அரசியல் மாற்றங்கள் இப்போது டெல்லி வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. காங்கிரஸுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகு, நாடாளுமன்றத்தில் தங்களுக்குத் தனி ஆசனங்கள் ஒதுக்க வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கை, ஆளுங்கட்சியான பாஜகவை உஷார்படுத்தியுள்ளது.

மகளிர் இடஒதுக்கீடு போன்ற முக்கிய அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாக்களுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைத் திரட்ட முடியாமல் பாஜக அரசு தவித்து வரும் நிலையில், தற்போது திமுகவின் ஆதரவைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்து அக்கட்சி ஆலோசித்து வருகிறது.

தமிழகத்தில் புதியதாக உருவெடுத்துள்ள தவெக கட்சியிடம் தோல்வியைத் தழுவியுள்ள திமுகவிற்கு, மத்தியில் நீண்ட காலம் எதிர்க்கட்சியாக இருப்பது சவாலானது என்பதால், அவர்கள் பாஜகவிற்கு நிபந்தனை அடிப்படையிலான ஆதரவை வழங்கலாம் எனக் கருதப்படுகிறது. இதற்கு முன்னரும் வாஜ்பாய் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுகளில் திமுக அங்கம் வகித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய மக்களவையில் திமுகவிற்கு 22 எம்பிக்களும், மாநிலங்களவையில் 8 எம்பிக்களும் உள்ளனர். இவர்களின் ஆதரவு கிடைத்தால் நாடாளுமன்றத்தில் பாஜக அரசு மிக வலுவான நிலையை எட்டும். இதற்கிடையே, தமிழகத்தில் பாஜகவின் தற்போதைய கூட்டாளியான அதிமுக, தவெக-விற்கு ஆதரவளிக்கும் விவகாரத்தில் ஏற்கனவே இரண்டு பிரிவுகளாகப் பிளவுபட்டுப் பலவீனமடைந்துள்ளது.

இதனால் அதிமுகவுடனான உறவை முறித்துக் கொண்டு, திமுகவுடன் புதிய அரசியல் நகர்வுகளை மேற்கொள்ள பாஜக தயங்காது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலிலும் திமுகவின் ஆதரவை உறுதி செய்ய பாஜகவின் மூலோபாயவாதிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

‘அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை’ என்ற கோட்பாட்டின்படி, டெல்லியில் அரங்கேறும் இந்த புதிய எம்பிக்கள் கணக்கு, தேசிய அளவிலும் தமிழக அளவிலும் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author