சுபமுகூர்த்த தினங்களில் வழக்கத்தை விட அதிகமாக பத்திரப் பதிவுகள் நடைபெறும் என்பதால், பொதுமக்களின் வசதிக்காக இன்று (29.05.2026) கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
வைகாசி மாத முகூர்த்த நாளான நாளை, அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், டோக்கன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று ஒரு சார்பதிவாளர் மட்டும் உள்ள அலுவலகங்களில் டோக்கன்களின் எண்ணிக்கை 100-லிருந்து 150 ஆகவும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200-லிருந்து 300 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், எப்போதும் அதிகப்படியான ஆவணப் பதிவுகள் நடைபெறும் முக்கிய 100 அலுவலகங்களில், சாதாரண டோக்கன்கள் 150 ஆக உயர்த்தப்பட்டுள்ளதுடன், தட்கல் முன்பதிவு டோக்கன்களின் எண்ணிக்கையும் 12-லிருந்து 16 ஆக அதிகரிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
