தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் மதுரையில் கூறியதாவது:
பள்ளிகளில் ஆசிரியர் காலியிடங்களை விரைவாக நிரப்ப உள்ளோம். சில பிரச்னைகள் நீதிமன்றங்களில் உள்ளன. மற்றவற்றுக்கு, பேசி தீர்வு காண்போம். கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முதல்வர் போல் செயல்படுகிறார் என தி.மு.க.,வினர் விமர்சிப்பதற்கு காரணம், கதை, திரைக்கதை, வசனம், அறிவாலயம் தான். ஆதவ், ஆற்றல் மிக்கவர். அவர் வந்தபின் தமிழகத்தில் பல மாற்றம் நடந்துள்ளதை பொறுக்க முடியாமல் அவரை சிறுமைப்படுத்த அவ்வாறு கூறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, திருப்பரங்குன்றம் அருகே ஆஸ்டின்பட்டி பி.டி.ஆர். பொறியியல் கல்லுாரியில் செயல்படும் அரசு மாதிரி உண்டு உறைவிடப் பள்ளியில் அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசுகையில், ”குழந்தை எதற்கு அழும் என்று தாய்க்கு தெரியும். மாணவர்கள் தங்கள் குறைகளுக்காக என் பெயரில் கடிதம் எழுதினால், சிட்டாக பறந்து வந்து விடுவேன்.
போனிலேயே வேலையை முடித்து விடுவேன்,” என்றார். ‘ஜாதி, மத அடையாளத்துடன் பள்ளிக்கு வரக்கூடாது’ என கூறியுள்ளீர்களே என்ற கேள்விக்கு பதிலளித்த ராஜ்மோகன், ”மாணவர்கள் கைகளில் பாண்ட் கட்டி வருகின்றனர். வெளியில் இருந்து சிலர் ஜாதியை துாண்டி விடுகின்றனர். ”அதனால் தான் அப்படி தெரிவித்தேன். நானே விபூதி, குங்குமம் அணிந்து தான் பள்ளிகளுக்கு ஆய்வு நடத்த செல்கிறேன். அதுபோல வருவதில் தவறில்லை,” என்றார்.
