ஸ்பியர் – உணர்வுபூர்வமான அறிவியல் அனுபவம்!

Estimated read time 1 min read
லாஸ் வேகஸ்க்கு போகும் வழியில், தொலைவில் ஒரு மிகப்பெரிய ஒளிரும் பந்து தெரியும். சில நேரம் அது பூமியாக இருக்கும். சில நேரம் ஒரு கண், சில நேரம் எமோஜி, இன்னும் சில நேரம் வேறு உலகமாகவே மாறிவிடும். அதன் பெயர் ஸ்பியர் (Sphere).

இந்தப் பிரம்மாண்டமான கட்டிடம் முதலில் 366 அடி உயரமுள்ள ஒரு பொறியியல் அதிசயமாக இருக்கவில்லை. அது ஒரு சிறிய ஸ்கெட்ச்.
ஸ்பியரின் பின்னால் இருந்த முக்கியமான யோசனை ஜேம்ஸ் எல்.டோலன் (James L. Dolan)ன் விஷனில் இருந்து உருவானது.
ஒரு நிகழ்ச்சியை மக்கள் வெறுமனே உட்கார்ந்து பார்க்காமல், அந்த நிகழ்ச்சிக்குள்ளேயே இருப்பது போன்ற உணர்வை உருவாக்க வேண்டும் என்பதுதான் அந்த யோசனையின் மையம்.
2018-ல் இந்தத் திட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பல ஆண்டுகள் கட்டுமானப் பணிகளுக்குப் பிறகு, 2023 செப்டம்பர் 29 அன்று Sphere திறக்கப்பட்டது.
அதன் முதல் நிகழ்ச்சியாக பிரபல ராக் இசைக்குழு U2 தனது நிகழ்ச்சியைத் தொடங்கியது.
Sphere சுமார் 366 அடி உயரமும், 516 அடி அகலமும் கொண்டது. இதன் கட்டுமானத்திற்குச் சுமார் 2.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவானது.
இவ்வளவு பெரிய கட்டிடம் என்றாலும், அதன் அளவைவிட அதன் தொழில்நுட்பம்தான் உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. வெளிப்புறத்தில் இருக்கும் மிகப்பெரிய திரைக்கு எக்ஸ்போஸர் (Exosphere) என்று பெயர்.
சுமார் 5.8 லட்சம் சதுர அடி பரப்பளவில் LED lights பொருத்தப்பட்டுள்ளன. இதனால் முழு கட்டிடமும் ஒரு மிகப்பெரிய திரையாக மாறுகிறது.
பூமி, கண், பூசணிக்காய், எமோஜி என பல விதமான காட்சிகளை அதில் காட்ட முடிகிறது.
ஆனால், வெளியே இருக்கும் திரையைவிட உள்ளே இருப்பதுதான் இன்னும் ஆச்சரியமானது.
உள்ளே சுமார் 1.6 லட்சம் சதுர அடி பரப்பளவில் இருக்கும் திரை பார்வையாளர்களைச் சுற்றியும் மேலேயும் விரிகிறது.
அதன் தெளிவு 16K அளவுக்கு இருக்கிறது. அதனால் ஒரு திரையைப் பார்ப்பது போன்ற உணர்வு இல்லாமல், அந்தக் காட்சிக்குள்ளேயே இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
உதாரணமாக, திரையில் நீங்கள் மலையின் உச்சியில் இருப்பது போல ஒரு காட்சி வந்தால், உங்கள் கண்களைச் சுற்றியுள்ள முழு இடமும் மலையாக மாறிவிடும். அதுதான் ஸ்பியர்-ன் தனிச்சிறப்பு.
ஒலி விஷயத்திலும் ஸ்பியர் சாதாரண அரங்குகளைவிட வித்தியாசமானது. சுமார் 1.67 லட்சம் programmable speakers கொண்ட ஒலி அமைப்பு மூலம் ஒலியை அரங்கின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மிகவும் துல்லியமாக அனுப்ப முடியும்.
இதனால் நீங்கள் எந்த இருக்கையில் அமர்ந்திருந்தாலும், ஒலியைச் சிறப்பாகக் கேட்கும் வகையில் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
சில நிகழ்ச்சிகளில் காற்று, மூடுபனி, வாசனை, அதிர்வு போன்ற உணர்வுகளையும் சேர்க்க முடியும். இதனால் ஒரு காட்சியை கண்களால் பார்ப்பது மட்டுமல்லாமல், உடலாலும் உணர முடிகிறது.
இதனால்தான் Sphere அனுபவத்தை சிலர் “கண்ணாடி அணியாமல் VR அனுபவிப்பது போல” என்று குறிப்பிடுகிறார்கள்.
இவ்வளவு பெரிய உருண்டை வடிவ கட்டிடத்தை உருவாக்குவது சாதாரண வேலை இல்லை. ஒரு 366 அடி உயரமுள்ள உருண்டையை தரையில் நிறுத்துவது மட்டும் சவால் இல்லை.
அதன் மீது 5.8 லட்சம் சதுர அடி அளவிலான LED surface-ஐ அமைத்து, உள்ளே ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை பாதுகாப்பாக அமர வைத்து, அதே நேரத்தில் முழு கட்டிடத்தையும் ஒரு giant screen போல செயல்பட வைப்பதே உண்மையான engineering challenge.
கட்டிடத்தை உருவாக்குவதற்கு முன்பே அதன் பல பகுதிகளை கணினி மாதிரிகளில் உருவாக்கி, அவை வலுவாக இருக்குமா, சரியாக வேலை செய்யுமா என்று பொறியாளர்கள் சோதித்துள்ளனர்.
அதன் வெளிப்புறத்தில் இருக்கும் steel diagrid அமைப்பும் கட்டிடத்தின் மிகப்பெரிய உருண்டை வடிவத்தைத் தாங்க உதவுகிறது.
மேலும், அதில் ஏதாவது ஒரு பகுதி பழுதானால் அதை எப்படி சரி செய்வது என்பதையும் முன்கூட்டியே திட்டமிட வேண்டி இருந்ததால் அதற்காக திரைகளின் பின்புறத்தைச் சென்றடைய சிறப்பு நடைபாதைகள், படிக்கட்டுகள் மற்றும் பராமரிப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஸ்பியர்-ன் கட்டிட வடிவமைப்பை போபுலஸ் (Populous) என்ற நிறுவனம் மேற்கொண்டது.
கட்டிடத்தின் வலிமை, ஒலி, வெளிப்புற அமைப்பு மற்றும் திரை போன்ற பல்வேறு பகுதிகளில் பல பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்து பணியாற்றின.
அதனால் Sphere ஒரே ஒருவரால் உருவாக்கப்பட்ட கட்டிடம் அல்ல; பல துறைகளைச் சேர்ந்த நிபுணர்களின் கூட்டு முயற்சி.
2023-ல் U2-வுடன் தொடங்கிய ஸ்பியர், பின்னர் பல பிரபல இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சிகளையும் திரைப்படங்களையும் நடத்தியது.
இசை நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல், பார்வையாளர்களை ஒரு கதைக்குள் அழைத்துச் செல்லும் தனிப்பட்ட அனுபவங்களும் இங்கு உருவாக்கப்படுகின்றன.
அதில் குறிப்பிடத்தக்க ஒன்று The Wizard of Oz அனுபவம். இந்த பழைய திரைப்படத்தை ஸ்பியர் திரை புதிய அனுபவமாக மாற்றியுள்ளனர்.
ஒரு சிறிய ஸ்கெட்ச்சாக ஆரம்பித்த ஒரு யோசனை, பல ஆண்டுகளுக்குப் பிறகு 366 அடி உயரமுள்ள ஒரு பிரம்மாண்டமான கட்டிடமாக மாறியது.
ஆனால் ஸ்பியர்-ன் உண்மையான சாதனை அதன் உயரத்திலும் அளவிலும் இல்லை.
“ஒரு நிகழ்ச்சியைப் பார்க்கும் அனுபவத்தைத் தாண்டி, அந்த நிகழ்ச்சிக்குள்ளேயே நம்மை அழைத்துச் செல்ல முடியுமா?” என்ற கேள்விக்கு, தொழில்நுட்பத்தின் மூலம் கொடுக்கப்பட்ட பதில்தான் ஸ்பியர்.

– சங்கீதா

You May Also Like

More From Author