தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலா மற்றும் ஆன்மீகத் தலமான ராமேஸ்வரம் பாம்பன் கடல் பாலத்தின் வழியாகச் சென்ற அதிவேக ரயிலில் இருந்து பெண் ஒருவர் திடீரெனக் குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை திருவனந்தபுரம் – ராமேஸ்வரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் பாம்பன் புதிய ரயில்வே பாலத்தின் கடல் பகுதியைக் கடந்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத பெண் ஒருவர் ரயிலில் இருந்து குதித்துள்ளார். அப்போது பாலத்தின் பாதுகாப்புத் தடுப்புச் சுவரில் பலமாக மோதியதில் அவருக்குத் தலையில் மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே காவல் ஆய்வாளர் கதிர்வேல் தலைமையிலான போலீசார், சுயநினைவற்ற நிலையில் கிடந்த அந்தப் பெண்ணை மீட்டு முதலுதவி அளித்த பின் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தற்போது சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வரும் அவர் குணமடைந்த பிறகே, அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் மற்றும் எதற்காக ரயிலில் இருந்து குதித்தார் என்பது குறித்த முழு விவரங்களும் தெரியவரும் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
#SHOCKING: Woman Jumps From Moving Train Into Sea While Crossing Pamban Bridge
A woman passenger was seriously injured after jumping from a moving train while it was crossing the new Pamban Railway Bridge in Tamil Nadu on November 15, 2026.
Interestingly, this was the second such incident within hours. A young man had jumped from another train on Saturday night, and his body was later recovered near Mullimunai Island.
— upuknews (@upuknews1) November 15, 2026
முன்னதாக, இதே பாம்பன் கடல் பாலத்தில் 24 மணி நேரத்திற்குள் நடைபெற்ற இரண்டாவது சோகச் சம்பவம் இதுவாகும். சனிக்கிழமை இரவு ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் பாலத்தைக் கடந்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் கடலில் குதித்தார். ரயில்வே மற்றும் கடலோரக் காவல் படையினர் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்திய நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை பாம்பன் முள்ளிமுனை தீவுப் பகுதியில் அந்த இளைஞரின் உடல் கரை ஒதுங்கியதைக் கடலோர போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திறக்கப்பட்ட புதிய பாம்பன் ரயில்வே பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் ராமேஸ்வரம் வந்து செல்கின்றனர். பாலத்தின் மேல் ரயில்கள் வேகமாகச் செல்லும்போது பயணிகள் ஆபத்தான முறையில் செல்ஃபி எடுப்பதும், தற்போது அடுத்தடுத்து இருவர் ரயிலில் இருந்து குதித்துள்ளதும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகள் மத்தியில் பெரும் கவலையையும் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
