டிசமபரில் நாடு திரும்பும் ஷேக் ஹசீனா; உத்தரவாதம் கேட்கும் இந்தியா

Estimated read time 1 min read

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வரும் டிசம்பர் மாதம் நாடு திரும்புவதற்கு இரண்டு உத்தரவாதங்களை அந்நாட்டு அரசு வழங்குமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும் அவாமி லீக் கட்சியின் தலைவருமான ஷேக் ஹசீனா, வரும் டிசம்பர் மாதம் மீண்டும் வங்கதேசத்திற்குத் திரும்பப் போவதாக அறிவித்துள்ளார்.

2024-ம் ஆண்டு மாணவர் போராட்டங்களின் விளைவாக இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனாவின் பாஸ்போர்ட் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் அவரது அவாமி லீக் கட்சியும் தடை செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் புரட்சியின் போது 1,400 பேர் கொல்லப்பட்ட குற்ற வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கும், முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸாமான் கான் கமலுக்கும் வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்துள்ளது.

இருவரும் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான நாடுகடத்தல் ஒப்பந்தத்தின்படி இரு குற்றவாளிகளையும் வங்கதேச அரசிடம் ஒப்படைக்கவேண்டும் என்று அந்நாட்டு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஷேக் ஹசீனா மீதான சட்ட நடவடிக்கைகளை தொடரவும், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளை நிறைவேற்றவும், அவரை நாடு கடத்த வேண்டும் என்று பிரதமர் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சியும் இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளது.

இந்நிலையில் புதிய பாஸ்போர்ட் மற்றும் தேசிய அடையாள அட்டை கேட்டு இந்தியாவில் உள்ள வங்கதேச தூதரகத்தில் ஷேக் ஹசீனா சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதையடுத்து தலைநகர் டாக்கா, காஜிப்பூர், கோபால்கஞ்ச் மற்றும் ஷரியத்பூர் உள்ளிட்ட பல நகரங்களில் வன்முறைகள் வெடித்தன.

ஷேக் ஹசீனா நாடு திரும்பினால் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என அந்நாட்டு அட்டர்னி ஜெனரல் எச்சரித்துள்ள நிலையில் ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுக்க ஆப்பிரிக்க நாடுகள் உட்பட எந்தவொரு நாடும் முன்வரவில்லை என்றும், டெல்லியில் அவர் தங்கியிருப்பது இந்திய அரசிற்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருவதாகவும் வங்கதேசப் பிரதமரின் உதவி ஊடகச் செயலாளர் நஸ்முல் ஹக் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த அக்டோபர் முதல் வாரத்தில் வங்கதேசத்திற்கான இந்திய உயர் ஆணையர் தினேஷ் திரிவேதி, அந்நாட்டு ராணுவத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத்தை சந்தித்ததாக இந்திய ராணுவத்தின் பொதுத் தகவல் பிரிவு தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப் பூர்வமாக அறிவித்திருந்தது.

ஷேக் ஹசீனா தாயகம் திரும்பும்போது, அவரது பாதுகாப்பு எந்த வகையிலும் கேள்விக்குள்ளாகக் கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவரை அழைத்துச் செல்ல ராணுவ விமானத்தை அனுப்புமாறும், அவரது தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என இந்தியா உத்தரவாதங்களை கோரியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்ட மத்திய வெளியுறவுதுறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கை ஒரு சட்டப்பூர்வ விவகாரம் என்றும், அதற்கேற்ப கையாளப்படும் என்றும் கூறியுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author