சென்னை : முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் தற்போதைய த.வெ.க. அரசு பொறுப்பேற்று 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில், அரசின் செயல்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். தேர்தல் காலத்தில் ‘மாற்றம்’ என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று மிகப்பெரிய ஏமாற்றத்தையே மக்களுக்கு வழங்கி வருவதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், சினிமாவில் கதாநாயகனாக வலம்வரும் முதல்வர் விஜய் நிஜ வாழ்க்கையில் வில்லனைப் போலச் செயல்பட்டு வருவதாகக் காரசாரமான விமரிசனங்களை முன்வைத்துள்ளார்.
தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசிய மு.க.ஸ்டாலின், “கடந்த 6 மாத காலமாகத் தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது என்று சொல்வதைவிட, மன்னிக்கவும்… அது ஆட்சி அல்ல, ஏதோ ஒரு ‘காட்சி’யாகத்தான் நடந்துகொண்டிருக்கிறது” என்று கிண்டலடித்தார்.
தேர்தல் நேரத்தில் ‘மாற்றம், மாற்றம்’ என்று முழக்கமிட்டவர்கள் இன்று தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையே பரிசாக அளித்துள்ளதாக அவர் சாடினார். முறையான நிர்வாகத் திறமையின்றி, மக்கள் நலப் பணிகளில் கவனம் செலுத்தாமல் ஆட்சியாளர்கள் செயல்படுவதால் மாநிலம் பின்னோக்கிச் சென்று கொண்டிருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
மாநிலத்தில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் குறித்தும், சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு குறித்தும் பேசிய அவர், தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகத் தெரிவித்தார். குறிப்பாக, அத்தகைய குற்றங்களில் ஈடுபடும் பெரும்பான்மையானவர்கள் ஆளுங்கட்சியான த.வெ.க.வைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர் என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். சமீபத்தில் பாலியல் புகாரில் சிக்கிய த.வெ.க. நிர்வாகி தலைமறைவாகியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இனி தவெக என்பதற்குப் பதிலாக அக்கட்சியை ‘பாலியல் சுரண்டல் கழகம்’ எனப் பெயர் மாற்றினால் மட்டுமே அது முற்றிலும் பொருத்தமாக இருக்கும் என்று கடுமையாக விமரிசித்தார்.
தாம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும், பொதுமக்கள் தன்னிடம் வந்து படும் வேதனைகளைப் பகிர்ந்து கொள்வதைக் குறிப்பிட்டார். “ஆட்சிப் பொறுப்பில் இல்லாவிட்டாலும் நீங்கள்தான் எங்களுக்கு உண்மையான முதல்வர் என்று மக்கள் என்னிடம் பேசும்போது குறிப்பிட்டார்கள். ஆனால், அப்படிச் சொல்லாதீர்கள் என்று நான் கூறுகிறேன்; ஏனென்றால், தற்போது நடக்கும் மோசமான ஆட்சியைக் கண்டு நாங்கள் வெட்கப்படுகிறோம்” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த அவல நிலைக்கெல்லாம் விரைவில் முடிவு கட்டப்பட்டு, மக்களுக்கான நல்லதொரு விடியல் பிறக்கும் காலம் நெருங்கிவிட்டதாகவும், வெகுவிரைவில் மீண்டும் தி.மு.க. ஆட்சி உதயமாகும் சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் தனது உரையில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
