நாமக்கல் நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயில்….!! 

Estimated read time 1 min read

கொங்குநாட்டில் உள்ள புகழ்பெற்ற வைணவத் தலங்களில் ஒன்றாக நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள நைனாமலை வரதராஜப் பெருமாள் கோவில் திகழ்கிறது.

நயன மகரிஷி எனும் சித்தர் இங்கு தவம் செய்து பெருமாளின் தரிசனம் பெற்றதால், இம்மலைக்கு ‘நைனாமலை’ என்ற பெயர் வந்தது. சுமார் 2,500 அடி உயரத்தில் உள்ள இக்கோவிலை அடைய 3,000-க்கும் அதிகமான படிகளை ஏறிச் செல்ல வேண்டும். மலையின் உச்சிக்குச் செல்லும் வழியில் ஆஞ்சநேயரை வணங்கிச் சென்றால் பெருமாளின் சன்னதியை அடையலாம்.

கோவிலின் கருவறையில் வரதராஜப் பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயாருடன் கையில் தண்டம் ஏந்தி பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். மூலவருக்கு வெளியே குவலயவல்லி தாயார், ஆண்டாள், ராமர், சீதை மற்றும் வேணுகோபாலர் ஆகியோருக்குத் தனிச் சன்னதிகள் உள்ளன. மேலும், இக்கோவிலின் வெளிப்புறத்தில் உள்ள பழமையான கல் மண்டபத் தூண்களில் படுக்கை ஜடாமுடி சித்தர், பிராண தீபிகை சித்தர் போன்ற பல சித்தர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

இத்தல இறைவனைச் சூரிய பகவான் வழிபட்டு வரம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதன் அடையாளமாக, தை மாதம் முதல் ஆனி மாதம் வரையிலான உத்ராயண புண்ணிய காலத்தில், தினசரி காலை வேளையில் சூரியக் கதிர்கள் மூலவர் பெருமாளின் முகத்தின் மீது நேரடியாக விழுவது இக்கோவிலின் மிக முக்கியச் சிறப்பம்சமாகும்.

இங்குள்ள வரதராஜப் பெருமாளை மனமுருகி வழிபட்டால் திருப்பதி சென்று வழிபட்ட முழுப் பலனும் கிடைக்கும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும். இதனால் இத்தலம் ‘சின்னத் திருப்பதி’ என்றும் அழைக்கப்படுகிறது. அத்துடன், இந்திர பகவானும் இங்கிருக்கும் பெருமாளை அருவமாக வந்து தினமும் வழிபட்டுச் செல்வதாக நம்பப்படுகிறது.

ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் இக்கோவிலில் உற்சவத் திருவிழா மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. வாரத்தின் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவது சிறப்பானது என்றாலும், புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி வந்து வழிபடுவர். இக்கோவில் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதன்சந்தையில் இருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

You May Also Like

More From Author