சென்னை ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
https://youtube.com/shorts/QJFOJITrP9c?si=OjTljD6qvOIKqwUx
மார்கழி மாத அமாவாசை மற்றும் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் திரளாக வருகை தந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழ் புராணங்களின் படி, ராமபக்தரான அனுமன் மார்கழி மாத அமாவாசையும், மூலம் நட்சத்திரமும் இணைந்த நாளில் அவதரித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, வழக்கமான அமாவாசைகளை விட மார்கழி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவதுடன், அனுமனை மனதார வழிபட்டால் அமைதி, செல்வ வளம், உடல் வலிமை மற்றும் தைரியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மார்கழி மாதத்தில் வரும் முக்கியமான விரத மற்றும் வழிபாட்டு நாட்களில் அனுமன் ஜெயந்தியும் ஒன்றாகும். தென் மாநிலங்களில் அனுமன் ஜெயந்தி மார்கழி மாதத்தில் கொண்டாடப்படும் நிலையில், வட மாநிலங்களில் சித்திரை மாதத்தில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது.
இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. அமாவாசை திதி இன்று காலை 05.57 மணிக்கு தொடங்கி, டிசம்பர் 20ம் தேதி காலை 07.54 மணி வரை நீடிக்கிறது. மேலும், மூலம் நட்சத்திரம் டிசம்பர் 20ம் தேதி அதிகாலை 12.05 மணிக்கு தொடங்குகிறது.
இதனை முன்னிட்டு, ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அனுமனை தரிசனம் செய்து வருகின்றனர்.
