கல்யாண யோகம் தரும் பாடகவள்ளி தாயார்….!!! 

Estimated read time 1 min read

பெரும்பாலான இடங்களில் குன்றின் மீது முருகப்பெருமானே வீற்றிருப்பார். ஆனால், மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேலூர் அருகே திருச்சுனையில் ஒரு சிறிய குன்றின் மீது அகஸ்தீஸ்வரராகச் சிவபெருமான் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்.

கயிலாயத்தில் சிவன்-பார்வதி திருமணத்தின் போது உலகின் சமநிலையைக் காக்கத் தென்திசை வந்த அகத்திய முனிவர், பிரான்மலையில் இறைவனின் திருமணக் கோலத்தைக் கண்டு களித்து, இந்த மலையில் நீர் தெளித்து லிங்கம் அமைத்து வழிபட்ட சிறப்புமிக்க தலமாகும் இது.

அகத்தியர் தன் தாகத்தைத் தீர்க்கத் தன் கைகளால் பாறையில் குழி தோண்டியபோது அங்கு ஒரு சுனை உருவாகியது. அகத்தியர் தோற்றிய அந்தச் சுனையின் பெயரால் இவ்வூர் ‘திருச்சுனை’ என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் உள்ள இறைவன் ‘அகஸ்தீஸ்வரர்’ என்றும், இறைவி ‘பாடகவள்ளி தாயார்’ என்றும் அழைக்கப்படுகின்றனர். அகத்தியர் வேண்டிக்கொண்டதற்கு இணங்க, இத்தல இறைவனை வழிபடுபவர்களுக்கு மன அமைதியும், தடைகளற்ற சுபகாரிய யோகமும் பலிக்கிறது.

திருமணத் தடைகள் நீங்கும் அற்புதத் தலமாக இக்கோவில் விளங்குகிறது. திருமணத்தடை உள்ள பெண்கள் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் பாடகவள்ளி அம்மனுக்கு மாங்கல்யமும் பட்டு வஸ்திரமும் சாத்தி வழிபட்டால் விரைவிலேயே திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. அதேபோல், திருமணமாகாத ஆண்கள் கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் அகஸ்தீஸ்வரருக்கு மாலை வழங்கி வேண்டிக்கொண்டால், விரைவில் கல்யாண யோகம் அமையும் எனக் கூறப்படுகிறது.

இயற்கை எழில் கொஞ்சும் வயல்வெளிகளுக்கு நடுவே, பாறையின் மீது அமைந்துள்ள இக்கோவிலுக்குச் செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலுக்குள் நுழைந்ததும் நவக்கிரகங்களையும், தனிச்சந்நிதியில் அகத்தியர், சித்தி விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் முருகன், பைரவர் உள்ளிட்ட தெய்வங்களையும் தரிசிக்கலாம். கோவிலின் பின்புறம் அகத்தியர் உருவாக்கிய வற்றாத சுனையும், தல விருட்சமான வில்வ மரமும் அமைந்துள்ளன.

இத்தலம் மதுரையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மதுரையிலிருந்தோ அல்லது திருச்சியிலிருந்தோ பேருந்தில் வருபவர்கள் கருங்காலங்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கியோ, அல்லது நகரப் பேருந்து மூலம் திருச்சுனை ஆர்ச் அருகே இறங்கியோ இக்கோவிலைச் சுலபமாக அடைந்து தரிசனம் செய்யலாம்.

You May Also Like

More From Author