மும்பையில் விநாயகர் வரவேற்பு விழாவின்போது சிலை சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர்.
மகாரஷ்டிரா மாநிலம் மும்பையின் ஜெய் அம்பெ சவுக் பகுதியில் நேற்று இரவு மக்கள் பார்வைக்காக கொண்டு வரப்பட்ட ராட்சத விநாயகர் சிலை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. சிலையை காண ஏராளமானோர் சுற்றி நின்றிருந்த நிலையில், சிலை சரிந்து கீழே விழுந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 2 பெண் குழந்தைகள் உட்பட 5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் பூலேஷ்வரில் உள்ள ஜெய அம்பே சௌக்கில், கபூதர்கானா அருகே பலராம் மெர்ச்சன்ட் சாலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து தீயணைப்புப் படையினர், காவல்துறையினர், ஆம்புலன்ஸ் சேவையினர் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் மீட்பு பணிக்காக களமிறக்கப்பட்டனர்.
இறந்தவர்கள் சங்கத் நெவ்ஷே (33) மற்றும் பிரிஜேஷ் ஹேமந்த் ஜோஷி (30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காயமடைந்த ஐந்து நபர்களான வைபவ் கெனந்த் (38), பவன் சௌராசியா (25), லாவண்யா கானர் (5), திவ்யா கானர் (7)மற்றும் குணால் காஷித் (26) ஆகியோர் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்கும் 10 நாள் கணேஷோத்சவம், மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் பிற பகுதிகளில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
