2025ஆம் ஆண்டுப் புத்தாண்டை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சீன ஊடக குழுமம் மற்றும் இணையம் வழியாக புத்தாண்டு உரை நிகழ்த்தினார். 2024ஆம் ஆண்டில் முக்கிய சாதனைகளைத் தொகுத்து, அனைவருக்கும் மகிழ்ச்சி நிலைக்கவும், பாதுகாப்புடன் இருக்கவும் மனமார்ந்த வாழ்த்து தெரிவித்தார்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 130 லட்சம் கோடி யுவானைத் தாண்டியது, தானிய விளைச்சல் 70ஆயிரம் கோடி கிலோகிராமை எட்டியது. மின்சார வானங்களின் உற்பத்தி முதல்முறையாக ஒரு கோடியைத் தாண்டியது என முக்கிய சாதனைகளை ஷிச்சின்பிங் உரையில் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஓராண்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தனது களஆய்வுப் பயணங்களைக் குறிப்பிட்ட அவர், மகிழ்ச்சியான வாழ்க்கையை மக்களுக்கு வழங்குவதே முதன்மை கடமை என்று வலியுறுத்தினார்.
சர்வதேச சூழல் குறித்து பேசுகையில், தற்போதைய உலகம், மாற்றமும் குழப்பமும் கலந்தவையாக உள்ளது. பொறுப்புணர்வுடன் செயல்பட்ட பெரிய நாடாகவே சீனா, உலகளாவிய நிர்வாகச் சீர்திருத்தங்களை ஆக்கப்பூர்வமாக முன்னெடுத்து, தெற்குலக நாடுகளிடையேயான ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை ஆழமாக்குவதில் பங்காற்றி வருகிறது.
சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் பெய்ஜிங் உச்சிமாநாட்டை நடத்திய சீனா, இருதரப்பு மற்றும் பலதரப்பு நிகழ்ச்சிகளில் சீனாவின் கருத்துக்களை முன்வைத்து, உலகின் அமைதி மற்றும் நிலைப்புத்தன்மையைப் பேணிக்காப்பதில் மேலதிக நேர்மறையான சக்தியை அளித்துள்ளது என்றும் ஷிச்சின்பிங் கூறினார்.
2025ஆம் ஆண்டு சீனா 14ஆவது ஐந்தாண்டு திட்டத்தை முழுமையாக நிறைவேற்றும். சீர்திருத்தம் மற்றும் திறப்புப் போக்கில் சீன நவீனமயமாக்கலுக்கு பரந்தப்பட்ட எதிர்காலம் திறக்கப்படும். சமூக நிர்வாகத் திறனை மேம்படுத்துவதன் மூலம், மக்களின் வாழ்க்கையுடன் சிறு மற்றும் பெரிய பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் கூறினார்.