தமிழகத்தில் தற்போது ஏழு சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் உயர்நீதிமன்றத்தில் எந்த வழக்கும் நிலுவையில் இல்லாததால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ள நிலையில் அக்டோபர் 6-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது அதனை தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் வெளியிடப்படும். இந்த நிலையில் இடைத்தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில் தேமுதிக தங்களுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
அதன்படி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவுக்கு தேமுதிக முழு ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இம்முடிவு தமிழக அரசியல் களத்தில் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மிகப்பெரிய அளவிலான வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெறுவார் என்று தேமுதிக உறுதியாக நம்புகிறது. இத்தேர்தலில் திமுகவின் வெற்றிக்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் தேமுதிக முன்னெடுக்கும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொலைபேசி வாயிலாக பிரேமலதா விஜயகாந்தை தொடர்புகொண்டு இடைத்தேர்தலில் தேமுதிகவின் ஆதரவை கோரினார். முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று, தேர்தலில் திமுகவுக்கு முழுமையான ஆதரவை வழங்க தேமுதிக முடிவு செய்துள்ளது.
மேலும், இந்த இடைத்தேர்தல் களத்தில் தேமுதிகவின் பங்களிப்பும் களப்பணியும் 100 சதவீதம் முழுமையாக இருக்கும் என்றும், திமுக வேட்பாளரின் வெற்றிக்கு அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தீவிரமாக உழைப்பார்கள் என்றும் தானும் பிரச்சாரத்திற்கு செல்வேன் என்றும் முதலமைச்சரிடம் தாம் உறுதி அளித்துள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்
