ஏலியன் மாதிரி‌ ஏஐ… ஒட்டுமொத்த உலகமும் ஒன்று சேர வேண்டிய நேரம் இது… இல்லனா மொத்தமா அழியும்… பில்கேட்ஸ் பகீர் எச்சரிக்கை…! 

Estimated read time 1 min read

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி குறித்து உலகம் முழுவதும் விவாதம் தீவிரமடைந்துள்ள நிலையில், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், செயற்கை நுண்ணறிவால் ஏற்படக்கூடிய பெரிய மாற்றங்களை எதிர்கொள்ள உலக நாடுகளின் அரசுகள் இன்னும் போதுமான அளவில் தயாராகவில்லை என்று எச்சரித்துள்ளார். வேலைவாய்ப்புகளில் மாற்றம், இணையத் தாக்குதல்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுடன் மனிதர்கள் அளவுக்கு அதிகமாகப் பழகும் நிலை போன்றவற்றையும் அவர் கவலையுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், செயற்கை நுண்ணறிவு கொண்டு வரக்கூடிய மாற்றங்களின் வேகத்துக்கு ஏற்ப அரசுகளின் தயாரிப்பு இல்லை என்று கேட்ஸ் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில், செயற்கை நுண்ணறிவு மருத்துவம், கல்வி, விவசாயம் போன்ற துறைகளில் பெரிய அளவில் உதவக்கூடிய திறனையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு போட்டியில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டி குறித்தும் கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். இரு நாடுகளின் முன்னணி செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்கு இடையிலான வித்தியாசம் மிகப் பெரியதாக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் இந்தப் போட்டி தொழில்நுட்பத்தைத் தாண்டி வேலைவாய்ப்பு, பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அந்தச் செய்தி குறிப்பிடுகிறது.

செயற்கை நுண்ணறிவை விளக்கும்போது, திரைப்படங்களில் ஏலியன் பூமியைத் தாக்கும்போது அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைவதைப் போல, AI விஷயத்திலும் நாடுகள் சில அம்சங்களில் ஒன்றாக செயல்பட வேண்டும் என்று கேட்ஸ் கூறியுள்ளார். இதற்கிடையில், கேட்ஸ் அறக்கட்டளை அடுத்த இரண்டு ஆண்டுகளில் குறைந்தது 100 கோடி அமெரிக்க டாலர் தொகையை செயற்கை நுண்ணறிவை சுகாதாரம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட துறைகளில் பயன்படுத்துவதற்காக செலவிடத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author