முதலமைச்சர் விஜய் லஞ்சத்திற்கு எதிராக இருப்பது உண்மைதான் – அண்ணாமலை..!

Estimated read time 1 min read

வீ.த.லீடர்ஸ் அமைப்பு சார்பில் சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் அருகே பேரணி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சி மேடையில் பேசிய அண்ணாமலை, “நடிகர் விவேக் அவர் வாழ்ந்த காலத்தில் 37 லட்சம் மரக் கன்றுகளை நட்டுள்ளார். 1 கோடி மரக்கன்று நட வேண்டும் என்று நினைத்தார். தற்போது மீதமுள்ள 63 லட்சம் மரக்கன்றுகளை நம் போன்ற மக்கள் நட வேண்டும் என்று விட்டு சென்றுள்ளார். அந்தப் பணியை வீ.த.லீடர்ஸ் அமைப்பு செய்கிறது.

தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 6 ஆயிரம் நீர் நிலைகளில், 50,197 நீர் நிலைகளாகவே இல்லை என மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கூறுகிறார். தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் வந்துள்ளது. ஓராண்டு காலம் நேரம் கொடுங்கள். 100-க்கும் மேல் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் வந்துள்ளார்கள். அவர்கள் வேலையை சரியாக செய்யவில்லை என்றால் முதல் குற்றச்சாட்டு வைப்பது நாமாக தான் இருப்போம். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

சில விஷயங்கள் சரியாக செய்கிறார்கள். சிலர் தவறு செய்கிறார்கள். அதை சொல்லும் போது திருத்தியும் கொள்கிறார்கள். அது நல்ல அரசியல் போக்கு. இன்று எதிர்க்கட்சி செய்ய கூடிய அரசியல் என்னவென்றால் எப்படியாவது ஆளுங்கட்சியை கவிழ்த்து ஆட்சிக்கு வர வேண்டும் என்பது தான். அதற்கு ஆபரேசன் மேகாலயா என்று பெயர். புள்ளை பிடிப்பது போல் 10 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டு வந்து சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து ஆட்சியை கவிழ்க்க பார்க்கிறார்கள்.

அண்ணாமலை இன்னும் பா.ஜ.க.வை விட்டு வரவில்லை. பா.ஜ.க.-வின் பி டீம் என்கிறார்கள். மேலும், மத்திய அமைச்சர் அமித்ஷா, அண்ணாமலை காதில் ஒரு விஷயம் சொன்னார் என்று கூறுகிறார்கள். ஆமாம் உண்மை தான் என்னை டெல்லிக்கு வர சொன்னார். பொறுப்பு எடுக்க சொன்னார். மூன்று ஆண்டுகள் மேல் டெல்லியில் இருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா சொன்னார்.

எனக்கு அது சரி வராது என்று சொன்னேன். இங்கேயே மக்கள் சேவை செய்து கொண்டு இருந்து கொள்கிறேன் என்றேன். தமிழ்நாட்டுக்கு எதிராக மேகதாது அணை கட்டப் போகிறார்கள் என்று தெரிந்து நான் பா.ஜ.க. மாநில தலைவராக இருந்தபோது, கர்நாடாக பா.ஜ.க. அரசுக்கு எதிராக போராடினேன். கட்சியில் இருந்தபோதும் சரி, கட்சி இது இல்லாத போதும் சரி, எப்போதும் தமிழினத்திற்காக மட்டும்தான் நின்று இருக்கிறோம். மாற்றத்திற்காக தான் நிற்கிறோம். மாற்றத்திற்காக தான் வீ.த.லீடர்ஸ் அமைப்பு செயல்படும்.

துரதிஷ்டவசமாக 2021-22-ல் அணையை கட்ட அனுமதி இல்லை என்று சொன்ன மத்திய அரசு, தற்போது கர்நாடக அணை கட்ட பிரச்சனை இல்லை என்று சொல்வது உண்மையாக வலிக்கிறது. பிரதமர் மோடி மீது நம்பிக்கை உள்ளது. மேகதாது விவகாரத்தில் இரண்டு மாநில முதலமைச்சர்களிடமும் பேசி சரியான முடிவை பிரதமர் மோடி எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு பட்ஜெட் பற்றி பேசவில்லை என்று சொல்கிறீர்கள். முதலமைச்சர் விஜய்க்கு ஒரே ஒரு வேண்டுகோள் வைக்கிறோம். தமிழ்நாடு பட்ஜெட் 15 ஆயிரம் கோடி சேமிக்கிறீர்கள். நீங்கள் மிச்சம் பிடிக்கும் 15 ஆயிரம் கோடியை கிராமத்தின் நீர் நிலைகளை மேம்படுத்தவும், பள்ளிகளை மேம்படுத்தவும், கிராமப்புற வளர்ச்சிக்கும் கொடுங்கள்.

முதலமைச்சர் விஜய் லஞ்சத்திற்கு எதிராக இருப்பது உண்மைதான். சில அமைச்சர்கள் இப்போது தான் லஞ்சம் வாங்க தொடங்கி உள்ளார்கள். என்னிடம் ஆடியோ உள்ளது. முதலமைச்சர் ஊழலை ஒழிக்க நினைக்கிறார். நீங்கள் இருப்பது போல் உங்கள் அமைச்சர்களையும் கொண்டு வர வேண்டும்.

மேடையில் ஏறி நடிகர், நடிகைகள் பற்றி பேசுவது அம்மா, அப்பா பற்றி பேசுவது, குடும்பத்தை பற்றி பேசுவது எல்லாம் அநாகரீகமானது. சட்டசபையில் அநாகரிகமாக பேசுவது சரியல்ல. இந்த அரசியல் வேண்டாம். Genz இளைஞர்களுக்கு இது பிடிக்கவில்லை. அவர்கள் வேறு அரசியலை எதிர்பார்க்கிறார்கள். அது எதிர்க்கட்சிகளுக்கு புரிந்ததா என்று தெரியவில்லை. எங்களுக்கு புரிந்துவிட்டது” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author