செப்டம்பர் 22-ஆம் தேதி பரிவர்த்தினி ஏகாதசி அனுசரிக்கப்படுகிறது. இந்த ஏகாதசிக்கு பர்ஷ்வ ஏகாதசி, ஜல்ஜூலனி ஏகாதசி உள்ளிட்ட பெயர்களும் உள்ளதாக புராணங்களில் குறிப்பிடப்படுகிறது. இந்த நாளில் விஷ்ணு பகவானை வழிபடுவது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
https://youtu.be/D9gd-zrRPI4?is=vKcwT5c5kilYdl8f
இந்து சமய நம்பிக்கையின்படி, ஆடி மாதத்தில் வரும் தேவசயனி ஏகாதசி முதல் கார்த்திகை மாதத்தில் வரும் தேவ உத்தான ஏகாதசி வரை விஷ்ணு பகவான் பாற்கடலில் ஆதிசேஷன் மீது யோக நித்திரையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த காலகட்டத்தின் நடுப்பகுதியில் வரும் ஏகாதசியன்று, விஷ்ணு பகவான் ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கம் திரும்பிப் படுப்பதாக நம்பப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த நாளுக்கு பரிவர்த்தினி ஏகாதசி என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த ஏகாதசி வாமன அவதாரத்துடனும் தொடர்புபடுத்தப்படுகிறது. மகாபலி மன்னனிடம் வாமனராக வந்த விஷ்ணு பகவான் மூன்றடி நிலம் கேட்டதாகவும், பின்னர் தனது மூன்று அடிகளால் மூவுலகையும் அளந்ததாகவும் புராணக் கதை கூறுகிறது. இதன் மூலம் தேவர்களுக்கான உரிமையை மீட்டதாகவும், மகாபலியின் கர்வத்தை அடக்கியதாகவும் நம்பப்படுகிறது.
https://youtu.be/D9gd-zrRPI4?is=vKcwT5c5kilYdl8f
பரிவர்த்தினி ஏகாதசி நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி, விஷ்ணு பகவானை வழிபட்டு, பூ, பழம் உள்ளிட்டவற்றை படைத்து விரதம் இருப்பது வழக்கமாக உள்ளது. வாமன அவதாரத்தின் கதையை கேட்பதும், விஷ்ணுவை வழிபடுவதும் இந்த நாளின் முக்கியமான ஆன்மிக நடைமுறைகளாகக் கருதப்படுகின்றன. இந்நாளுடன் தொடர்புடைய பலன்கள் அனைத்தும் மத நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
