இல்லத்தரசிகள் ஷாக்..! 3 மடங்கு உயர்ந்த சின்ன வெங்காயம் விலை..!

Estimated read time 1 min read

போதிய மழை இல்லாததால் கடுமையான வறட்சி ஏற்பட்டு சின்ன வெங்காய உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக சந்தைக்கு வரும் சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்து, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் விலை திடீரென 3 மடங்கு வரை உயர்ந்துள்ளது.

வழக்கமாக கோயம்பேடு சந்தைக்கு தினசரி 8 முதல் 9 லாரிகளில் சின்ன வெங்காயம் விற்பனைக்கு குவிந்து வரும். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வரத்து குறைவால், கடந்த சில நாட்களாக மிக குறைந்த எண்ணிக்கையிலான லாரிகளில் மட்டுமே சின்ன வெங்காயம் விற்பனைக்கு வந்து கொண்டு இருக்கிறது.

இந்த தட்டுப்பாடு காரணமாக, கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.120 வரை விற்பனை ஆகிறது. அதேபோல், வெளி மார்க்கெட்டில் உள்ள சில்லரை காய்கறி கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.160 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல், பெரிய வெங்காயத்தின் விலையும் தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.60 வரையிலும், வெளி மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ ரூ.75 வரையிலும் விற்பனை ஆகிறது.

புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதால் அசைவ உணவுகளை தவிர்த்து பலரும் சைவ உணவுகளுக்கு மாறியுள்ளனர். இதனால் காய்கறிகளின் தேவை அதிகரித்து, பச்சை காய்கறிகளின் விலையும் மெல்ல மெல்ல உயர்ந்துள்ளது. மொத்த விற்பனையில் பீன்ஸ் மற்றும் அவரைக்காய் கிலோ ரூ.80-க்கும், ஊட்டி கேரட், பீட்ரூட் மற்றும் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.40-க்கும் விற்கப்படுகிறது. ஆனால், வெளிமார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் பீன்ஸ் மற்றும் அவரைக்காய் ஒரு கிலோ ரூ.120 வரையிலும், கேரட், பீட்ரூட் மற்றும் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.70 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

You May Also Like

More From Author