பாரதத்தை இணைக்கும் பாலமாக இராமர் உள்ளார் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Estimated read time 1 min read

பாரத நாட்டின் அனைத்து குடிமக்களின் இதயங்களிலும், வாசம் செய்யும் இராமர், பாரதத்தை இணைக்கும் அனைவருக்குமான பாலமாகவும் இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

75-வது குடியரசு தின விழா நாடு முழுவதும், இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில், காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையும் ஏற்றுக்கொண்டார்.

முன்னதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாவது, 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு,தமிழ்நாட்டின் என் சகோதர, சகோதரிகளுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது நாட்டினை அந்நிய ஆட்சியிடமிருந்து மீட்டு, நமக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த கணக்கில்லாத தியாகிகள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆகியோரின் தியாகங்களுக்கு  என் இதயம் நெகிழ்ந்த அஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

நமது ராணுவத்தினர், பாதுகாப்பு அமைப்புகள், காவல்துறையினர் ஆகியோருக்கு வணக்கங்களைத் தெரிவிக்கிறேன். அவர்கள் இடைவிடாத விழிப்புடன் இருந்து, சாகசம் மற்றும் தியாகங்களைப் புரிந்து நமது நாட்டினைப் பாதுகாக்கிறார்கள்.

உள்நாட்டில் அமைதி, ஸ்திரத்தன்மை, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதி செய்து இயற்கை பேரிடர்களின் போது, பாதிக்கப்படுவோரை மீட்டு, நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.  மிக்ஜாங் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த இடைவிடாத மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரை மீட்டு நிவாரணம் வழங்கிய தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு  பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவிக்கிறேன்.

சந்திரயான் 3, ஆதித்யா எல்1 ஆகியவை மூலம் நமது விஞ்ஞானிகள் நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர். தேசத்திற்கு கிடைத்த பெருமையை  உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். சர்வதேச அளவில் சாதனை படைத்த நமது தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பாராட்டுக்கள்.

சில நாட்கள் முன்பு அயோத்தியில் பால ராமர் திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த வரலாற்று நிகழ்ச்சி, நாடு முழுவதும் சக்தியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், மக்களின் மனங்களில் ஒரு முழுமையான வளர்ந்த பாரத்தை உருவாக்கத் தேவையான தன்னம்பிக்கை, புதிய ஆற்றல் ஆகியவற்றை வழங்கியது.

பாரத நாட்டின் அனைத்து குடிமக்களின் இதயங்களிலும் வாசம் செய்யும் அவர், பாரதத்தை இணைக்கும் அனைவருக்குமான பாலமாக உள்ளார் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author