யுபிஐ கட்டண விவகாரம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சண்டிகரில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், 2,000-க்கும் குறைவான சிறிய பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது என்று கூறினார்.
இது, கணினி அமைப்பை மேம்படுத்தவும், சிறந்த சேவைகளை வழங்கவும் சேவை வழங்குநர்களால் வசூலிக்கப்படும் கட்டணம் எனக் கூறிய அவர், நுகர்வோர் மீது எந்தவித சுமையும் திணிக்கப்படாது என்றும், வாடிக்கையாளர்கள் இதற்காகப் பணம் செலுத்த வேண்டியதில்லை எனவும் தெளிவுபடுத்தினார்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அப்போதே தாம் விளக்கம் அளித்ததாகவும், உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்புவதும், அதன் அடிப்படையில் விவாதங்களை உருவாக்குவதும் எதிர்க்கட்சிகளுக்கு வாடிக்கையாகிவிட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுவது கண்டிக்கத்தக்கது என்று கூறிய நிர்மலா சீதாராமன், பொதுமக்கள் இதுபோன்ற தவறான பிரச்சாரங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
