கடலில் மூழ்கும் நிலையில் தவித்த கப்பல்…! 23 பேர் உயிரைக் காப்பாற்றிய இந்தியப் படை…! கடைசி நேரத்தில் நடந்த அதிரடி மீட்பு…!!! 

Estimated read time 1 min read

ஒடிசா மாநிலம் பாரதீபதுறைமுகத்துக்கு அருகே கடலில் ஆபத்தில் சிக்கிய வெளிநாட்டு ரசாயனக் கப்பலை இந்தியக் கடலோரக் காவல் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். பெலீஸ் நாட்டுக் கொடியுடன் பயணித்த எம்டி சீகல் 9 என்ற அந்தக் கப்பலில் 9,000 மெட்ரிக் டன் பாமாயில் இருந்தது. மேலும், கப்பலில் இருந்த 23 ஊழியர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி காலை சுமார் 7.30 மணியளவில் கப்பலில் இருந்து அவசர உதவி கோரி அழைப்பு வந்தது. பாரதீப் துறைமுகத்திலிருந்து சுமார் 37 கடல் மைல் தொலைவில் கப்பல் இருந்தபோது, அதன் இயந்திரம் பழுதடைந்தது. இதனால் கப்பலின் அடிப்பகுதியில் உள்ள நீர்த்தொட்டிகளில் கடல்நீர் வேகமாகப் புகுந்து, கப்பல் ஒருபுறமாகச் சாயத் தொடங்கியது. இதையடுத்து இந்தியக் கடலோரக் காவல் படையின் ஐசிஜிஎஸ் விஸ்வாஸ்ட் கப்பல் சம்பவ இடத்துக்கு விரைந்தது.

கப்பலில் ஏறிய சிறப்புக் குழுவினர், நீரை வெளியேற்றும் பம்புகளைப் பயன்படுத்தி உள்ளே புகுந்த நீரை வெளியேற்றினர். சேதமடைந்த கடல்நீர் குழாய்களையும் அடைத்து, மேலும் நீர் கசிவதைத் தடுத்தனர். அதே நேரத்தில் கப்பலில் இருந்த சரக்குகளை வேறு இடத்துக்கு மாற்றும் பணியும், நீரை வெளியேற்றும் பணியும் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் கப்பலை நிலைப்படுத்தி, அது கவிழும் அபாயத்தைத் தவிர்த்தனர்.

கடலில் எண்ணெய் மாசு ஏற்படுவதைத் தடுப்பதற்காகக் கடலோரக் காவல் படையின் மாசுக் கட்டுப்பாட்டுக் கப்பலும், கூடுதல் ரோந்துக் கப்பலும் அனுப்பப்பட்டன. டோர்னியர் விமானம் மூலம் வான்வழிக் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டது. செப்டம்பர் 27-ஆம் தேதி கப்பலைச் சுற்றி பாமாயில் படலம் காணப்பட்ட நிலையில், அடுத்த நாள் மேற்கொண்ட கண்காணிப்பில் அது மறைந்திருந்தது. பின்னர் பாரதீப் துறைமுகத்தின் டால்பின் இழுவைக் கப்பல், எம்டி சீகல் 9-ஐ பாதுகாப்பான நங்கூரமிடும் பகுதிக்கு இழுத்துச் சென்றது. தற்போது அதன் முக்கிய இயந்திரத்தைச் சரிசெய்யும் பணி தொடங்கியுள்ளது.

You May Also Like

More From Author