ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நாளை திட்டமிட்டப்படி சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் பாமக தலைவர் அன்புமணி.
பாமகவில் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே அண்மைக்காலமாக நீடித்து வரும் மோதல், அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இத்தகைய பரபரப்பான சூழலில் ‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ என்ற தலைப்பில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நாளை நடைபயணத்தை தொடங்க உள்ளார். நவம்பர் 1ம் தேதி வரை நடைபெறும் இந்த நடைபயணம் நாளை திருப்போரூரில் தொடங்கி தருமபுரியில் நிறைவடையவுள்ளது. அன்புமணி நாளை தொடங்க இருக்கும் ‘உரிமை மீட்பு’பயணத்தில் பாமக பெயர், கட்சிக் கொடியை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி நிறுவனர் ராமதாஸ் டிஜிபியிடம் மனு அளித்துள்ளார். அன்புமணியின் சுற்றுப்பயணத்தால் வட தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என ராமதாஸ் டிஜிபியிடம் புகார் மனு அளித்துள்ளார்.
இந்நிலையில் திட்டமிட்டப்படி ‘உரிமை மீட்க தலைமுறைக் காக்க..’ என்ற சுற்றுப்பயணம் நாளை தொடங்கப்படவுள்ளதாக அன்புமணி தரப்பு கூறியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நாளை அன்புமணி நடைபயணம் மேற்கொள்ள காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரும் 25ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரை முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் நடைபெறும் மேற்கொள்ள உள்ளார். குறிப்பாக ஒவ்வொரு பகுதியாக சென்று மக்களிடம் தமிழகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து எடுத்துக் கூறி, வாக்கு சேகரிக்க உள்ளார்.