ஆரஞ்சு நிறத்தில் வந்த எமன்…! சவுதி ஏர்போர்ட் மீண்டும் பயங்கர தாக்குதல்…

Estimated read time 1 min read

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட கொடூர ஏவுகணைத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஐதராபாத்தைச் சேர்ந்த நபர் ஒருவரும் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சவுதி அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள சிசிடிவி காட்சிகளின்படி, சனிக்கிழமையன்று விமான நிலையத்தில் பயணிகள் வழக்கம்போலப் பயமின்றி அமர்ந்திருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென ஒரு பிரகாசமான ஆரஞ்சு நிற ஒளியுடன் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ஏவுகணைத் தாக்குதலில் விமான நிலையத்தின் முனையக் கட்டிடத்தின் கூரைப்பகுதியின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. பயத்தில் பயணிகள் அனைவரும் அலறிடித்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடியது அந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

இந்த கோரத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 380-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பலியானவர்களில் தனது குடும்பத்துடன் மதீனா நோக்கிப் பயணம் செய்த ஐதராபாத்தைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவார் என்பது சோகத்தை மேலும் கூட்டியுள்ளது.

யேமனைச் சேர்ந்த ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளனர். இதுகுறித்து பேசிய ஹவுதி அமைப்பின் ராணுவப் பேச்சாளர் யஹ்யா சாரி, சவுதியின் கிழக்கு மாகாணத்தில் உள்ள தம்மாம் விமான நிலையம் மற்றும் சவுதி அராம்கோ நிறுவனத்தின் இரண்டு எண்ணெய் நிலையங்கள் மீதும் தாங்கள் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமையும் ரியாத் விமான நிலையம் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு மாகாணத்தின் மீது பறந்த ஆளில்லா விமானம் மற்றும் காமிஸ் முஷைத் நோக்கி வீசப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை ஆகியவற்றை சவுதி வான் பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக இடைமறித்து அழித்தனர். எனினும், தொடர் தாக்குதல்களால் கடந்த ஒரு வாரத்தில் ரியாத் விமான நிலையத் தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, சவுதி விமானங்களைப் பயணிகள் பயன்படுத்த வேண்டாம் என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் எச்சரித்துள்ளனர். பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு பிரிட்டன் அரசு தனது குடிமக்களுக்கு அவசர பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேலும், அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறையும் சவுதி வான்வெளியில் விமானங்கள் பறக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

நிலைமையின் தீவிரத்தைக் கருத்திற்கொண்டு, ரியாத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை நேரடி வகுப்புகளுக்குப் பதிலாக இணையவழி வகுப்புகள் நடைபெறும் என சவுதி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். யேமன் எல்லையில் சவுதி அரேபியா தனது ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்தத் தாக்குதல்கள் அரங்கேறியுள்ளது மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

You May Also Like

More From Author