தமிழக அரசியலில் பரபரப்பு : இபிஎஸ்-க்கு எதிராக எஸ்.பி.வேலுமணி இல்லத்தில் 3-வது நாளாக தொடரும் ஆலோசனை!

Estimated read time 1 min read

இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில், கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள எஸ்.பி. வேலுமணி இல்லத்தில் இன்றும் ஆலோசனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., 47 தொகுதிகளில் மட்டுமே வென்ற நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட சிலருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மோதலாக மாறியது.

அதன் தொடர்ச்சியாக, வேலுமணி தலைமையில் 25 எம்.எல்.ஏ.,க்கள், த.வெ.க., அரசுக்கு ஆதரவு கொடுத்தனர். பின்னர் அவர்களில் 6 பேர் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.,வில் இணைந்தனர்.

அதைத்தொடர்ந்து, தனக்கு எதிராக செயல்பட்டவர்களின் கட்சி பதவிகளை பழனிசாமி அதிரடியாக பறித்தார். பின், அவர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவியை தவிர்த்து, வேறு பதவிகளை வழங்கினார். எனினும், அதிருப்தி அணியினர் அமைதியாகவே இருந்தனர்.

இந்நிலையில்,மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தலில், மூன்றாம் இடத்துக்கு அ.தி.மு.க., சென்றுவிட்டது. பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற, அவ்விரு தொகுதிகளிலும், 6 மாதத்தில், மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டு, படுதோல்வியடைந்தது, கட்சி நிர்வாகிகளிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதை பயன்படுத்திக்கொள்ள, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிருப்தி அணியினர் முடிவு செய்து, பழனிசாமிக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

இந்தநிலையில், இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் அதிமுக தோல்வி அடைந்தநிலையில் எஸ்.பி. வேலுமணி இல்லத்தில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தலைமையில் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகஇடைத்தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் அதிருப்தியாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அணி, மீண்டும் ஆலோசனை நடத்துவதால் கட்சியில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

You May Also Like

More From Author