தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு செல்போன் கொண்டு போகலாம்

Estimated read time 1 min read

தமிழகத்தில் உள்ள பழனி, திருச்செந்தூர், மதுரை மீனாட்சி அம்மன், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட முக்கியப் பிரசித்தி பெற்ற 52 கோயில்களில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பக்தர்களின் செல்போன்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. கோயிலுக்குள் செல்பவர்கள் தங்களது போன்களைப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்துவிட்டுச் செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இதனால், போனை உள்ளே வைக்கவும், தரிசனம் முடித்துவிட்டு வாங்கவும் பக்தர்கள் மணி கணக்கில் நீண்ட வரிசையில் காத்துக்கிடந்து பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

பக்தர்களின் இந்தத் தொடர் சிரமங்களைக் கருத்தில்கொண்டு, இந்து சமய அறநிலையத்துறை தற்போது முக்கியத் தளர்வுகளை அறிவித்துள்ளது. இனி பக்தர்கள் தங்களது செல்போன்களைத் தாராளமாகக் கோயிலுக்குள் எடுத்துச் செல்லலாம். இருப்பினும், போனைப் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக, கோயிலுக்குள் நுழையும்போதே செல்போனை முழுமையாக ‘சுவிட்ச் ஆஃப்’ செய்துவிட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், கோயிலுக்குள் செல்போனை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், மூலவர் சிலைகள், பூஜைகள் மற்றும் வழிபாடுகளைப் புகைப்படம் எடுப்பது, வீடியோ மற்றும் செல்ஃபி எடுப்பது, சமூக வலைதளங்களில் பதிவிடுவது போன்ற செயல்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து கடுமையாக நடைமுறையில் இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என்றும் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்போனை லாக்கரில் வைத்து வாங்கும் துயரத்திலிருந்து பக்தர்களுக்குத் தற்போது பெரிய அளவில் நிவாரணம் கிடைத்துள்ள நிலையில், இந்த புதிய அறிவிப்பு ஆன்மிகப் பயணிகளுக்கு மிகப்பெரிய நிம்மதியைக் கொடுத்துள்ளது!

You May Also Like

More From Author