அருணாச்சல பிரதேச மாநிலத்தின் கிழக்கு சியாங் மாவட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள 11,200 மெகாவாட் திறன் கொண்ட ‘சியாங் மேல்நோக்கு பல்நோக்குத் திட்டத்திற்கு’ எதிராக நடத்தப்பட்ட போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது. 12 மணி நேர பந்த் போராட்டம் நிறைவடைந்த நிலையில், பாசிகாட் பகுதியில் திரண்ட போராட்டக்காரர்கள் தேசிய நீர்மின் கழக அலுவலகம் மற்றும் காவல் நிலையத்திற்குத் தீ வைத்தனர். மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த காவல் துறை வாகனங்கள் கொளுத்தப்பட்டதோடு, மாநில பாஜக தலைவர் கலிங் மோயோங் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நினோங் எரிங் ஆகியோரின் வீடுகளும் அடித்துச் சூறையாடப்பட்டன.
இந்த வன்முறைச் சம்பவங்களின் போது போராட்டக்காரர்கள் நடத்திய கல்வீச்சுத் தாக்குதலில் பல காவல் துறையினர் படுகாயமடைந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் கலைக்கவும் பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதில், பல பெண்களும் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 10 சமூக ஆர்வலர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், இடைநீக்கம் செய்யப்பட்ட கிராமத் தலைவர்களை மீளமமர்த்த வேண்டும் மற்றும் இத்திட்டம் தொடர்பான அனைத்து ஆய்வுப் பணிகளையும் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பல்வேறு உள்ளூர் அமைப்புகள் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தன.
Pasighat, Arunachal Pradesh: Anti-dam protests turn violent as NHPC office and police station are torched after the bandh. Clashes injure several.
Yet CM Pema Khandu has opened the door for talks — hoping dialogue can protect both the Siang River and the people’s future. #Arunachal #Pasighat #SiangDam
— TheGenzzzVoice (@genzvoicee) October 24, 2026
சியாங் நதிப் படுகை, பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நில உரிமை ஆகியவற்றில் இத்திட்டம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என அஞ்சியே உள்ளூர் மக்கள் இதற்குத் தீவிர எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், நதிப் படுகையில் நீரைச் சேமிக்கவும் கட்டுப்படுத்தவும், குறிப்பாகச் சீனா முன்மொழிந்துள்ள மெகா அணைக்கு எதிர்காலப் பதிலடியாகவும் இந்தத் திட்டம் அவசியம் என அருணாச்சல பிரதேச அரசு விளக்கமளித்துள்ளது. மேலும், தேசிய நீர் மற்றும் ஆற்றல் பாதுகாப்பு, வெள்ள மேலாண்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தத் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தற்போது அங்கு நடைபெற்று வரும் பணிகள் அனைத்தும் திட்டத்தின் சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்கான தொழில்நுட்ப மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள் மட்டுமே என்று தெளிவுபடுத்தியுள்ள அரசு, பொதுமக்கள் வதந்திகளையும் போலிச் செய்திகளையும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. அதே வேளையில், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்திற்குக் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து சுதந்திரமான விசாரணைக்கு வலியுறுத்தியுள்ளதால், அருணாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
