பிரான்ஸில் விலைவாசி உயர்வால் வெடித்த மக்கள் கோபம்…! வீதிகளில் வன்முறை, 1,000-க்கும் மேற்பட்டோர் கைது… 70,000 போலீசார் குவிப்பு…!! 

Estimated read time 1 min read

பிரான்ஸில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. விலைவாசி உயர்வு, கல்வித் துறைக்கான நிதிப் பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் உள்ளிட்ட பிரச்சினைகளைக் கண்டித்து மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர். தலைநகர் பாரிஸ் மட்டுமின்றி லியோன், ஸ்ட்ராஸ்பர்க் உள்ளிட்ட பல நகரங்களிலும் போராட்டங்கள் பரவியுள்ளன. கடந்த இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தப் போராட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போராட்டங்களின்போது சில இடங்களில் தீவைப்பு, கடைகள் சூறையாடுதல் மற்றும் காவல்துறையினர் மீது தாக்குதல் போன்ற சம்பவங்கள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த பாரிஸ், லியோன், கிளெர்மோன்-ஃபெரான், ஸ்ட்ராஸ்பர்க் உள்ளிட்ட நகரங்களில் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர். நீஸ் மற்றும் நான்டெஸ் நகரங்களில் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன. வன்முறை மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் 70,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழலில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மக்களிடம் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்களைப் பிரிக்கும் முயற்சிகளுக்குப் பலியாக வேண்டாம் என்றும், ஒரு தரப்பினரை மற்றொரு தரப்பினருக்கு எதிராக நிறுத்தும் சூழலைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பிரான்ஸ் குடியரசின் அடிப்படை ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பைக் கைவிடத் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.

விலைவாசி உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பது பொதுமக்களின் கோபத்துக்குக் காரணமாக அமைந்துள்ளன. கல்வித் துறையில் நிதிப் பற்றாக்குறை நிலவுவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மாணவர்களின் கோரிக்கைகளுடன் தொடங்கிய போராட்டம் தற்போது நாடு தழுவிய எதிர்ப்பாக மாறியுள்ளது. போராட்டங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது, மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு எவ்வாறு பதிலளிக்கப் போகிறது என்பதே தற்போது முக்கியக் கேள்வியாக உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author