இரவு நேரத்திலும் பூமியின் குறிப்பிட்ட பகுதிகளில் சூரிய ஒளியைப் பாய்ச்சும் புதிய விண்வெளித் திட்டத்தை அமெரிக்காவைச் சேர்ந்த ‘ரிஃப்ளெக்ட் ஆர்பிட்டல்’ என்ற நிறுவனம் முன்னெடுத்து வருகிறது.
விண்வெளியில் பிரம்மாண்டமான பிரதிபலிப்புக் கண்ணாடிகளை நிறுவி, சூரிய ஒளியைப் பூமிக்குத் திருப்பி விடுவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். இந்தத் தொழில்நுட்பம் சூரிய மின் உற்பத்திக்கு உதவுவதுடன், இரவு நேர மீட்புப் பணிகளுக்கும் பயன்படும் என நிறுவனம் தெரிவிக்கிறது.
அதே நேரத்தில், இயற்கையான இரவு நேரத்தை மாற்றக்கூடிய இந்த முயற்சி சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, பூமிக்கு அருகிலுள்ள குறைந்த உயரச் சுற்றுப்பாதையில் பிரதிபலிப்புக் கண்ணாடிகளைக் கொண்ட செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்படும். அவை சூரிய ஒளியைப் பெற்று, பூமியின் குறிப்பிட்ட பகுதிகளுக்குத் திருப்பிவிடும். இதன் மூலம் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகும் சூரிய மின் நிலையங்களின் செயல்பாட்டுக்கு உதவலாம் என்றும், அவசரகாலங்களில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்குத் தேவையான வெளிச்சத்தை வழங்கலாம் என்றும் நிறுவனம் கூறுகிறது. இந்தத் திட்டத்தின் முதல் சோதனைச் செயற்கைக்கோளுக்கு அமெரிக்காவின் பெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் கடந்த ஜூலை மாதம் அனுமதி அளித்துள்ளது.
ஆரம்பத்தில் ஒரு சோதனைச் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ள நிறுவனம், எதிர்காலத்தில் ஆயிரக்கணக்கான கண்ணாடி செயற்கைக்கோள்களை நிறுவும் நோக்கத்தையும் கொண்டுள்ளது. ஆனால், இரவு நேரத்தில் செயற்கையாக வெளிச்சத்தைப் பாய்ச்சுவது மனிதர்களின் தூக்கச் சுழற்சியையும், பறவைகள், பூச்சிகள் உள்ளிட்ட உயிரினங்களின் இயல்பான வாழ்க்கை முறையையும் பாதிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகளும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கவலை தெரிவிக்கின்றனர். மேலும், விண்வெளியிலிருந்து பிரதிபலிக்கப்படும் ஒளி வானில் பரவுவதால், திட்டமிட்ட இடத்தைத் தாண்டியும் வெளிச்ச மாசுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தத் திட்டத்தால் வானியல் ஆராய்ச்சிகளும் பாதிக்கப்படலாம் என்பது மற்றொரு முக்கியக் கவலையாக உள்ளது. விண்வெளிக் கண்ணாடிகளிலிருந்து பிரதிபலிக்கும் ஒளி, தொலைநோக்கிகள் மூலம் மேற்கொள்ளப்படும் நட்சத்திரங்கள் மற்றும் தொலைதூர விண்வெளிப் பொருட்கள் குறித்த ஆய்வுகளுக்குத் தடையாக இருக்கலாம் என வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தத் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பது இன்னும் சோதிக்கப்பட வேண்டிய நிலையில், அதன் சுற்றுச்சூழல் விளைவுகள் குறித்தும் விரிவான ஆய்வுகள் தேவைப்படுகின்றன. அறிவியல் முன்னேற்றத்துக்கும் இயற்கையின் சமநிலையைப் பாதுகாப்பதற்கும் இடையே எவ்வாறு சமநிலை ஏற்படுத்துவது என்ற கேள்வியை இந்தத் திட்டம் எழுப்பியுள்ளது.
