ரயில்வேக்கு குட்டு வைத்த நுகர்வோர் கோர்ட்…

Estimated read time 1 min read

பெங்களூருவில் இருந்து சிவமோகா நோக்கி ரயிலில் பயணம் செய்த ஒரு குடும்பத்திற்கு கழிப்பறையில் தண்ணீர் இல்லாததால் பெரும் அசெளகரியம் ஏற்பட்டது. துமகூர் ரயில் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தும் எந்த உதவியும் கிடைக்காததால், அக்குடும்பத்தைச் சேர்ந்த 24 பேரும் ரயிலை விட்டு இறங்கி, ரூ.1,760 கூடுதல் செலவில் வேறு ரயிலில் பயணிக்க நேரிட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நாகேந்திரா என்பவர் தொடர்ந்த வழக்கில், ரயில்வேயின் சேவை குறைபாட்டைக் கண்டித்த சிவமோகா மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம், பயணிகளுக்கு ரூ.15,000 இழப்பீடும், டிக்கெட் கட்டணத்தை வட்டியுடன் திருப்பித் தரவும் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

சிவமோகாவைச் சேர்ந்த நாகேந்திரா என்பவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 23 பேருடன் யஷ்வந்தபூரிலிருந்து சிவமோகா செல்லும் ரயிலில் ரூ.1,000 செலவில் பொதுப் பெட்டி டிக்கெட் எடுத்துப் பயணித்துள்ளார். பயணத்தின் போது ரயிலின் கழிப்பறைகளில் தண்ணீர் இல்லாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். துமகூர் ரயில் நிலையத்தில் இறங்கி ஸ்டேஷன் மாஸ்டரிடம் புகார் அளித்தும் எந்த தீர்வும் கிடைக்காததால், வேறு வழியின்றி அந்த ரயிலை விட்டு வெளியேறி, கூடுதல் பணம் செலுத்தி வேறு ரயிலில் பயணத்தை நிறைவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்திற்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியும் எந்தப் பதிலும் வராததால், நாகேந்திரா சிவமோகா மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணையத் தலைவர் டி.சிவண்ணா மற்றும் உறுப்பினர் பி.டி.யோகானந்தா அடங்கிய அமர்வு, ரயிலில் அடிப்படை வசதியான தண்ணீர் இல்லாததும், ரயில் நிலையத்தில் உதவி செய்யாததும் சேவை குறைபாடே என்று சுட்டிக்காட்டி ரயில்வே நிர்வாகத்திற்கு ரூ.15,000 இழப்பீடு விதிக்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவின்படி, தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் நாகேந்திராவுக்கு முதன்மை டிக்கெட் தொகையான ரூ.1,000-ஐ 6 சதவீத ஆண்டு வட்டியுடன் திருப்பித் தர வேண்டும். மேலும், குடும்பத்திற்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10,000 இழப்பீடாகவும், வழக்குச் செலவாக ரூ.5,000 என மொத்தம் ரூ.16,000 வழங்க வேண்டும் என்றும், இதனை 45 நாட்களுக்குள் வழங்கத் தவறினால் 10 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும் என்றும் நுகர்வோர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author