மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்வர்களில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அவுட்லுக், மைக்ரோசாப்ட் 365 மற்றும் டீம்ஸ் ஆகிய சேவைகள் உலகளவில் முடங்கின.
அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல் முதலே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அவுட்லுக், மைக்ரோசாப்ட் 365, கோபைலட் மற்றும் டீம்ஸ் ஆகிய தளங்களைப் பயன்படுத்துவதில் பயனர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டது. அவுட்லுக் சேவை முடங்கியது குறித்து, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகின. மைக்ரோசாப்ட் 365, டீம்ஸ் தளங்கள் செயல்படாததால், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஐ.டி., மற்றும் கார்ப்பரேட் அலுவலகப் பணிகள் முற்றிலும் ஸ்தம்பித்தன.
மைக்ரோசாப்ட் 365 இணைப்புகளில் ஏற்பட்ட இந்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, முன்னணி ஏஐ நிறுவனங்களான ஓபன் ஏஐ, மற்றும் ஆந்த்ரோபிக் ஆகியவற்றின் மைக்ரோசாப்ட் இணைப்புச் சேவைகளும் முடங்கின.
மெயில், காலண்டர் மற்றும் தேடல் கருவிகள் செயல்படவில்லை என ஆந்த்ரோபிக் நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில், படிப்படியாக சர்வர்கள் சீரமைக்கப்பட்டு வருவதாகவும், பயனர்களுக்கு சேவைகள் மீண்டும் கிடைக்க தொடங்கியுள்ளதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
