நிரந்தர மனிதர்கள் – (கவிதைத் தொகுப்பு)

Estimated read time 1 min read
நிரந்தர மனிதர்கள் – (கவிதைத் தொகுப்பு) நூல் விமர்சனம்:


கண்ணாடிக்

குதிருக்குள்

ஒற்றைத்

தானியமாய்

நிமிர்ந்து

நிற்கும்

லாந்தரின்

உயிர்
இதுபோன்ற அழகு கொஞ்சும் வரிகள் நிச்சயமாக நம்மை ஈர்க்கும். எனெனில், லாந்தரின் உயிர் கண்ணாடிக் குதிருக்குள் மட்டும் முடங்கிக் கிடப்பது அன்று.
இது, விசுவரூப நெருப்பாக எழுகிறது என்பதனால் சூரியனைப் பூமி சுற்றுவது எப்படி பூமியின் இயல்போ அதுபோல இத்தொகுப்பு மக்களைச் சென்றடையும் என்று நம்புகிறேன்.
இந்த நூலை விமர்சனம் செய்யுங்கள் என்று எந்த விமர்சகனுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கத் தயாரில்லை.
சமூக மாற்றத்தைக் கடமையாகக் கொண்ட விமர்சகனைத் தவிர என்று கவிஞர் இன்குலாப்பின் அத்தாட்சியுடன் வந்திருக்கும் தொகுப்பு ‘நிரந்தர மனிதர்கள்’. கவிஞர் அறிவுமதியின் இரண்டாம் தொகுப்பு இது.
கடவுள் பக்தி மிகுந்தவர்கள் கடவுள் வாழ்த்துடன் தொடங்குவர். கவிஞரும் கடவுள் வாழ்த்துடன் தொடங்கியுள்ளார். கவிஞரைப் பொருத்தவரை தமிழ்க் கடவுள் முருகனே கடவுள்.
கடவுள் வாழ்த்து என்பதைவிட கடவுளிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். பிரச்சனைகளை முன்வைத்துள்ளார். தன்னை நாத்திக பக்தன் என்றே அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.
நேதாஜியான

நீ

காந்தியாக மாற்றப்பட்டிருக்கிறாய்
என மாற்றியவர்களைக் குற்றம்சாட்டியுள்ளார்.
வெறியாட்டும் கூட

இங்கே

வேகப் பட்டாயிற்று;

காரணம்,

நாங்கள் பூசியிருப்பது

பழநித்

திருநீறல்ல

கீழ்வெண்மணித்

திருநீறு
என கோபத்தையும் முருகனிடம் கூறுவதாக மக்களிடம் பேசியுள்ளார்.
கடவுள் வாழ்த்துகளிலேயே இதுவொரு வித்தியாசமான கவிதை. வாழ்த்தாக இல்லாமல் மக்கள் பிரச்சனைகளையே பேசியுள்ளார். ஒரு மக்கள் கவிஞர் என்பதைத் தெரிவித்துள்ளார்.
கல்லூரிகள், பட்டங்கள், வேலைகள் என்றொரு கவிதை – கல்லூரிகளில் பட்டங்கள் பெற்று வேலையில்லாமல் திண்டாடும் இளைஞர்களின் நிலையை எடுத்துக் காட்டுகிறது.
வணிக மகளின்

கர்ப்பப் பைகள்

என கல்லூரிகளையும்
சொத்துக்களை

விற்று விட்டு

வாங்கிய

இலாட்டரிச் சீட்டுகள்
என பட்டங்களையும் விமர்சனம் செய்துள்ளார்.
படித்து பட்டம் பெற்று வேலையில்லாமல் இருப்பதால் தாயும் திட்டுகிறாள்.
படிக்க வைக்கும் செலவிற்கு எருமைகளை வாங்கி விட்டிருக்கலாம் என தாய் திட்டுவதாக எழுதியுள்ளார்.
கல்லூரிகள் வணிக நிறுவனங்களாகிவிட்ட பின் கல்வியின் தரமும் குறைந்து விட்டது. வேலை வாய்ப்பும் அரிதாகிவிட்டது. இக்கவிதை ஒரு விமர்சனமாக உள்ளது.
இந்திய சுதந்திரத்திற்காக போராடி, வெள்ளையர்களின் எதிர்ப்புக்கு ஆளாகி தூக்கிலிடப்பட்ட போதும், துணிந்து முகமூடி அணியாமல் தூக்கு மேடை ஏறி தேசத்துக்காக உயிர் துறந்தவர் மாவீரர் பகத்சிங்.
பகத்சிங் பேசுவதான ஒரு கவிதை.
மரணத்தையே நாங்கள்

சுவாசிக்கக்

கற்றுக் கொண்ட பிற்பாடு

கொள்ளையர்களே

உங்களின் அச்சுறுத்தல்கள்

என்ன செய்யப் போகின்றன?
என்று பகத் சிங் வெள்ளையருக்கு எதிராக பேசுவதாக எழுதப்பட்டுள்ளது.
கவிஞர் வெள்ளையர் என குறிப்பிடவில்லை. கொள்ளையர் என்றே குறிப்பிடுகிறார்.
அச்சுறுத்தல்கள் எதுவும் செய்யாது என கொள்ளையர்களை அச்சுறுத்தியுள்ளார்.
சமாதானமாக போக சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்கள் அல்ல நாங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவீரன் பகத்சிங் மரணத்தின் விளிம்பு வரை பயமின்றியே சென்றவன். தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடும் செய்யவில்லை.
பகத்சிங்குடன் ராஜகுரு, சுகதேவும் தூக்குமேடை ஏறினார்கள். ஆனால், அவ்விருவர் குறித்து கவிஞர் அறிவுமதியும் பேசவில்லை.
ஒரு கவிஞராக கவிஞர்களுக்கு எழுதிய கவிதை கவிஞர்களே. கவிஞர்கள் என்பவர்கள் எதை எழுத வேண்டும், எவருக்கு எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
நாற்று நடும்

பெண்களுக்கும்

நம் கவித்துவம்

புரிய வேண்டும்

மாடு மேய்க்கும்

தோழர்களும்

நம் பாடல்களைப்

பாட வேண்டும்
என்று அறிவுறுத்தி, வாருங்கள் கவிஞர்களே வீதிக்குச் செல்வோம் என அழைப்பு விடுத்துள்ளார்.
கவிஞர்கள் மக்களுக்காக, மக்களையே பாட வேண்டும் என்று உணர்த்தியுள்ளார்.
‘ஒரு கைதியின் காதல் கடிதம்’ கவிதை பெண்ணுக்கான அறிவுரையாக உள்ளது.
காதலியிடம் கம்யூனிசம் பேசியுள்ளார். பெண்ணைப் போராட தூண்டியுள்ளார்.
ஒரு கைதியான தான் கொல்லப்பட்டாலும் கணவனுக்காக போராடிய கண்ணகியாய் பொங்கி எழு என்கிறார்.
கண்ணகியின் கையில் கால் சிலம்பு இருந்தது போல பெண்ணின் கையில் இருக்க வேண்டியது மாக்சிம் கார்க்கி எழுதிய தாய் நாவல் என்று அறிவுறுத்தியுள்ளார்.
ஒரு கைதியானாலும் காதலிக்கு துணிச்சலை ஊட்டியுள்ளார்.
அரசியல் தலைவனை நம்பி அநியாயமாக வாழ்க்கையை இழந்தவர்கள், தொலைத்தவர்கள் தொண்டர்கள். தீக்குளிக்கவும் செய்தவர்கள்.
கவிஞர் ‘தொண்டர்களைத் தீக்குளித்த விட்டில்களே’ என சாடியுள்ளார். ‘அடப்பாவிகளா’ என கோபமாகத் திட்டியுள்ளார்.
ஆண்டுகளில் பூத்து

நிமிடங்களில் உதிர்கிற

மனிதரின் நடுவே

நிமிடங்களில் பூத்து

வருடங்களில் வாழ்கிற

யுகக் கவிஞனே
என மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களை அழைத்து ஒரு கவிதை எழுதியுள்ளார்.
சோவியத் புரட்சியின்

தமிழக

வருகைக்காக

ஏக்கம் வளர்த்தவன்
என பட்டுக்கோட்டையார் குறித்து பாடியுள்ளார்.
காக்கைக் குருவி எங்கள் சாதி என்று பாடிய மகாகவி பாரதியுடன் காக்கை பேசுவதான கவிதை.
‘காக்கைகள் பேசும் பாரதியோடு’.
வாழ்வோடு

பசி போராட

உரிமை ஆரம்பித்து விடுகிறபோது

புயலோடு

புறப்பட்டு விடுகிறது

புரிய வைத்தவன்

நீதானே பாரதி
என காக்கைகள் பேசுவதாக எழுதியுள்ளார். பசி போராட வைக்கிறது என்பதை புரியச் செய்துள்ளார்.
செல்லம்மாவுக்குத்

தாலி கட்டியதும்

எனக்குக்

கண்ணம்மா

என்றொரு

பொய்ப் பெயர் சூட்டி நீ

கவிதையில்

அழுது

சோகம் குறைத்தாய்
என பாரதிக்காக அழும் ஒருத்தியில் கண்ணம்மாள் எழுதியதாக கவிஞர் அறிவுமதி எழுதிய கவிதை.
செல்லம்மாவிற்கு வாழ்க்கையைத் தந்த பாரதி கண்ணம்மாவிற்கு கவிதையைத் தந்துள்ளார்.
கண்ணம்மாவிற்காக கண்ணம்மாவை நினைத்தே பாரதி கவிதைகள் எழுதியதாக தெரிவித்துள்ளார்.
எங்களைச்

சிறைகளில் அடைத்தால்

நாங்கள் தாம்

கைதிகள்

எங்களின்

கொள்கைகள் அல்ல

எங்களைக்

கொன்றால்

நாங்கள்தாம்

பிணங்கள்

எங்களின்

இலட்சியங்கள் அல்ல

இந்தச்

சின்னத் தூறலுக்கே

இப்படி

இரும்புக் குடைக்குள்

ஒண்டுகிறீர்களே

நாளைய

நெருப்பு மழைக்கு

எந்தக் குடையில்

அடேய்

எந்தக் குடையில்
என்னும் நெருப்பின் மக்கள் கவிதை புரட்சியாளர்களைப் பற்றி பேசுகிறது.
விடுதலைக்காக போராடுபவர்கள் குறித்து கூறுகிறது. சிறையில் அடைத்தாலும் கொள்கைகளை அடைக்க முடியாது என்றும் கொன்று புதைத்தாலும் பிணங்களையே புதைக்க முடியும் இலட்சியங்களை அல்ல என்றும் எச்சரித்துள்ளார்.
போராளிகளை அழித்தாலும் போராட்டங்கள் ஓயாது என்றும் தெரிவித்துள்ளார்.
மரணம் மனிதர்களால் மறுக்க முடியாது. மரணம் கண்டு மனிதர் பயப்பட தேவையில்லை. மரணம் அடையும் மனிதனே முழுமை அடைகிறான்.
மலர் மலர்வது போல மனிதர் வாழ்வில் மரணம் நிகழ்வது. மரணத்திற்கு பின்னே வாழ்வு சிறக்கும்.
மார்க்சைப்போல்

எங்கெல்சைப்போல்

லெனினைப்போல்

மாவோவைப்போல்

பெரியாரைப்போல்

பூமியை

நேசிக்கத் தெரிந்தவர்களே

மரணத்தைக

கொல்கிறார்கள்

மற்றவர்கள்

மரணத்தால்

கொல்லப்படுகிறார்கள்

ஆனாலும்

மரணம்

சாபமல்ல

வரம்
என்று மரணம் இனிது கவிதையில் கவிஞர் அறிவுமதி தெரிவித்துள்ளார். பூமியை நேசிக்கத் தெரிந்தவர்களாக மனிதர் இருக்க வேண்டும். அவர்களால் மரணத்தையும் நேசிக்க முடியும் என்கிறார்.
எனினும் முடிவில் மரணம் சாபமல்ல வரம் என்கிறார். மரணத்தை ஒரு வரமாக மனிதர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். வரவேற்க வேண்டும்.
கடைசியாக

உங்களுக்கென்று

மிஞ்சுவதெல்லாம்

அப்பாவி இரசிகர்களின்

அர்த்தமற்ற

கடிதங்கள் மட்டும்தானே
என நடிகைகள்க்கு எழுதும் கவிதையில் எழுதியுள்ளார். நடிகைகளின் பரிதாப நிலையை படம் பிடித்துக் காட்டியுள்ளார். அர்த்தமுள்ள இக்கவிதையும் மிஞ்சியுள்ளது.
கோடி

நிர்வாணங்களுக்கு மேலே

தேசியக்

கொடி பறக்கும்

தேசமிது
என இருபதாம் நூற்றாண்டில் எழுதிய கவிதையில் எழுதியுள்ளார்.
தேசியக் கொடி பறந்தாலும் தேசத்தின் நிர்வாணத்தை மறைக்கமுடியவில்லை என்கிறார். மக்களின் வறுமையை நீக்காமல் தேசியக் கொடி பறந்தென்ன பயன்? இது தேசத்திற்கே அவமானம்.
நிரந்தர மனிதர்கள் என்னும் இத்தொகுப்பில் கவிஞர் அறிவுமதி நிசமான மனிதர்கள் பற்றி பாடியுள்ளார்.
பெண் முதல் போராளி வரை பலரையும் பாடியுள்ளார். அவரவர் என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
அநியாயங்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளார். அரசையும் விமர்சித்துள்ளார்.
நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்று கவிஞரிடம் ஒரு வேட்கை உள்ளதை நிரந்தர மனிதர்கள் காட்டுகிறது.
பல்வேறு வகையினரைப் பாடினாலும் பொதுவாக மனிதர்கள் என்னும் அடிப்படையிலேயே அவர்களுக்கு உரிமைக் கோரும் விதமாக கவிதைகள் எழுதியுள்ளார்.
கவிஞரின் கோபத்தின் வெளிப்பாடாகவே கவிதைகள் உள்ளன. எடுத்துக்காட்டுக்காக பலரை எடுத்துக்காட்டியுள்ளார்.
‘நிரந்தர மனிதர்கள்’ என்னும் தொகுப்பு மூலம் அறிவுமதியும் ஒரு நிரந்தர கவிஞர் என்பதைக் காட்டியுள்ளார்.
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை என்னும் கவியரசு கண்ணதாசன் வரிகள் கவிஞர் அறிவுமதிக்கும் பொருந்தும்.
– பொன். குமார்

The post கண்ணதாசன் வார்த்தைகள் அறிவுமதிக்கும் பொருந்தும்! appeared first on Thaaii Magazine.

Please follow and like us:

You May Also Like

More From Author