இந்தியாவுக்கு முதல் முறையாகப் பயணம் மேற்கொண்டுள்ள நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில், பாலேந்திர ஷா அணிந்திருந்த கருப்புக் கண்ணாடி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஜெய்சங்கருடன் அமர்ந்திருந்தபோதும் பாலேந்திர ஷா கருப்புக் கண்ணாடி அணிந்திருந்தார். இதைப் பார்த்த சமூக வலைதளப் பயனர்கள், அதிகாரப்பூர்வ சந்திப்பின்போது உட்புறத்திலும் கண்ணாடி அணிந்திருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினர். ஒருவர், “அவர் பாடல் பாடுகிறாரா அல்லது இந்திய வெளியுறவு அமைச்சரைச் சந்திக்கிறாரா?” என்று விமர்சித்திருந்தார். அதே புகைப்படத்தில் ஜெய்சங்கரின் கால்சட்டை சற்று மேலே உயர்ந்திருந்ததையும் சிலர் விவாதித்தனர்.
Ask Balen Shah, why he’s wearing sunglasses in the meeting? Is he singing or meeting India’s foreign minister? I guess, he needs to learn etiquettes.
— Swami Prem Sangeet. (@Bharti_PCRI) November 23, 2026
இதற்கிடையே, பாலேந்திர ஷா கண்ணாடி அணிவதற்குப் பின்னால் மருத்துவக் காரணம் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரகாசமான வெளிச்சத்தால் கண்களில் ஏற்படும் உணர்திறன் பாதிப்பைக் குறைக்க மருத்துவப் பரிந்துரையின் பேரில் அவர் உட்புறங்களிலும் கருப்புக் கண்ணாடி அணிவதாகக் கூறப்படுகிறது. மற்றொருவர், அவருக்கு கண் தொடர்பான பிரச்சினை இருக்கலாம் என்றும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
ராப் இசைக் கலைஞராகவும் சிவில் பொறியாளராகவும் இருந்த பாலேந்திர ஷா, அரசியலுக்கு வருவதற்கு முன்பே தனது தனித்துவமான தோற்றத்தால் கவனம் பெற்றவர். கருப்புக் கண்ணாடி மற்றும் நேபாள பாரம்பரியத் தொப்பி அணிவது அவரது வழக்கமான தோற்றமாக இருந்து வருகிறது. காத்மாண்டு மேயராக இருந்தபோதும், தற்போது பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகும் அந்தத் தோற்றத்தைத் தொடர்ந்து வருகிறார்.
