நவராத்திரி 5ம் நாள் வழிபாடு :
அம்பிகையின் பெயர் – மோகினி (வைஷ்ணவி)
கோலம் – பறவை வகை கோலம்
மலர் – மனோரஞ்சிதம் அல்லது பாரிஜாதம்
இலை – திருநீற்றுப் பச்சை இலை
நைவேத்தியம் – தயிர் சாதம்
சுண்டல் – பூம்பருப்பு சுண்டல் (கடலை பருப்பு)
பழம் – மாதுளை பழம்
ராகம் – பந்துவராளி
நிறம் – சிவப்பு
நவராத்திரியின் 5ம் நாளில் சொல்ல வேண்டிய மந்திரம் :
மூல மந்திரம் :
“ஓம் ஹ்ரீம் க்ளீம் வைஷ்ணவி ஓம்”
காயத்ரி மந்திரம் :
1. ஓம் நாகவாஹினாயை வித்மஹே
சக்ரஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்
2. ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்
நவராத்திரியின் 5வது நாளில் லலிதா சகஸ்ரநாமம், லலிதா பஞ்சரத்னம், கனகதாரா ஸ்தோத்திரம் ஆகியவற்றை படித்து வழிபடுவது சிறப்பு. இந்த மந்திரங்களை சொல்லி வைஷ்ணவி தேவியை வழிபாடு செய்வதால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். இல்லத்தில் லட்சுமி கடாட்சம் நிரந்தரமாக நிலைத்திருக்கும்.
பொதுவாக பலரும் வீட்டில் தங்கம், அரிசி, உப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கி வைத்தால் தான் மகாலட்சுமிக்கு பிடிக்கும். இந்த பொருட்களில் தான் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது தவறானதாகும். யாருடைய மனமும், வீடும் சுத்தமாகவும், நறுமணத்துடனும் உள்ளதோ அங்கு தான் மகாலட்சுமி வாசம் செய்வாள். பிறருக்கு தீங்கு நினைக்காமல், நல்லது மட்டுமே நினைப்பவர்களிடமும் தான் மகாலட்சுமி விரும்பி வருவாள். வீட்டில் கதவு உள்ளிட்ட இடங்களிலும் துணிகளை போடுவது, சமையலறை அசுத்தமாகவும் எச்சில் பாத்திரங்களை கழுவாமலும் வைத்திருக்கும் வீடு, துர்நாற்றம் வீசும் இடங்களில் மகாலட்சுமி தங்குவது கிடையாது. இதனால் தான் எப்போதும் வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், நவராத்திரி சமயத்தில் அழகாக அலங்கரித்து நறுமணத்துடன் வைத்திருக்க வேண்டும் என சொல்கிறார்கள்.
அதே போல் நம்முடைய வீட்டிற்கு வருபவர்களுடன் மகாலட்சுமி வருவதாக நம்பப்படுகிறது. அதனால் தான் வீட்டிற்கு யார் வந்தாலும் அவர்களை அன்பாக உபசரித்து, குங்குமம் உள்ளிட்ட மங்கள பொருட்கள் கொடுத்து வரவேற்க வேண்டும், உணவு பரிமாறி, அவர்களை மகிழ்ச்சியாக அனுப்பி வைக்க வேண்டும். இப்படி செய்தால் அந்த வீட்டிலேயே மகாலட்சுமி விரும்பி தங்கி விடுவாளாம். ஒருவேளை வீட்டிற்கு வருபவர்கள் மன வருத்தப்பட்டு திரும்பி சென்றால் அவர்களுக்கு முன்பாகவே மகாலட்சுமி அங்கிருந்து வெளியேறி விடுவாள் என சொல்லப்படுகிறது. நவராத்திரி காலத்தில் யாருடைய வடிவத்திலாவது மகாலட்சுமி நம்முடைய வீட்டிற்கு வந்து, நாம் தரும் பிரசாதத்தை ஏற்கலாம். அதனால் வீட்டிற்கு வருபவர்களை அன்பாக, மரியாதையுடன் நடத்துவது அவசியம்.