கோத்ரா வழக்கு கைதிக்கு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமின்..!

Estimated read time 1 min read

குஜராத்தின் கோத்ரா ரயில் நிலையத்தில், 2002- பிப்ரவரியில், சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டி தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால், மாநிலம் முழுதும் கலவரம் வெடித்தது. இந்த வழக்கில், நீண்ட விசாரணைக்கு பின், இர்பான் சிராஜ் படா உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 18 ஆண்டுகளுக்கும் மேல் சிறைவாசம் அனுபவிக்கும் இர்பான் சிராஜ் படா, உடல்நலக் குறைபாடுகளை குறிப்பிட்டு, உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமின் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பிரசன்னா பி.வராலே ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. குஜராத் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுவாதி கில்டியால், மருத்துவ காரணங்களுக்காக இர்பான் சிராஜ் படாவின் ஜாமினுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இதன்பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த மனு, மருத்துவ காரணங்கள் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரரின் உடல்நிலை குறித்து, அவரது மூத்த வழக்கறிஞர் சமர்ப்பித்த தகவல்கள் உண்மையானவை என, மாநில அரசு வழக்கறிஞரும் தெரிவித்துள்ளார். எனவே, மருத்துவ காரணங்களுக்காக மனுதாரரின் தண்டனையை நிறுத்தி வைக்கிறோம்.

இந்த உத்தரவு, வழக்கிலிருந்து விடுதலை செய்வதாகாது. இது, இடைக்கால நிவாரணம் மட்டுமே. விசாரணை நீதிமன்றத்தின் கடும் நிபந்தனைகளுக்கு உட்பட்டே இர்பான் படாவுக்கு ஜாமின் வழங்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author