இந்தியா, சீனா உள்ளிட்ட 16 நாடுகள் மீது புதிய வரி விதிக்கத் திட்டம்… டிரம்ப் அதிரடி!

Estimated read time 1 min read

வாஷிங்டன் : அமெரிக்க நிறுவனங்களின் வர்த்தக நலன்களுக்கும் உள்நாட்டு உற்பத்திக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில், அதிகப்படியான தொழில்துறை உற்பத்தியை மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டி, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட 16 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை கணிசமாக உயர்த்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

உலகளாவிய வர்த்தகச் சூழலில் மீண்டும் ஒரு புதிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்தத் திட்டத்தின் பின்னணியில், சம்பந்தப்பட்ட 16 நாடுகளும் தங்களது உள்நாட்டுத் தொழில்துறைக்கு அதிகப்படியான அரசு மானியங்களை (Government Subsidies) வழங்கி, சந்தைத் தேவைக்கும் அதிகமான உற்பத்தியைப் (Overcapacity) பெருக்கி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இவ்வாறு அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் குறைந்த விலையில் சர்வதேசச் சந்தையில் குவிக்கப்படுவதால், உலகளாவிய வர்த்தகத்தில் கடுமையான சமநிலையின்மை ஏற்படுவதாகவும், இதன் காரணமாக அமெரிக்க நிறுவனங்கள் போட்டியிட முடியாமல் பெரும் பொருளாதார இழப்புகளைச் சந்திப்பதாகவும் டிரம்ப் நிர்வாகம் கருதுகிறது.

இந்த நிலையை மாற்றியமைக்கவும், அமெரிக்காவின் உள்நாட்டுத் தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் நோக்கிலும், சம்பந்தப்பட்ட நாடுகள் மீது கூடுதல் இறக்குமதி வரிகளை விதிக்க டிரம்ப் நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. குறிப்பாக, உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையங்களாகவும் அமெரிக்காவுக்கு அதிகளவில் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளாகவும் உள்ள இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைப் பிரதான இலக்காகக் கொண்டு இந்த வரி உயர்வுத் திட்டம் வகுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான இறக்குமதி வரிக் கொள்கைகளால் சர்வதேச அளவில் வர்த்தகப் போர் குறித்த பதற்றங்கள் நிலவி வரும் சூழலில், தற்போது இந்தியா, சீனா உள்ளிட்ட 16 நாடுகளின் மீது மீண்டும் கைவைக்க அமெரிக்கா திட்டமிட்டிருப்பது உலகப் பொருளாதார வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும்பட்சத்தில், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பல்வேறு முக்கியத் துறை சார்ந்த பொருட்களின் விலை அதிகரித்து, இந்திய ஏற்றுமதியாளர்களுக்குப் புதிய சவால்களை உருவாக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author