அமெரிக்காவில் சுமார் 43 ஆண்டுகளாகக் காணப்படாமல் இருந்த அரிய வகை மின்மினிப் பூச்சி மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. 1983-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தப் பூச்சி தென்பட்டதற்கான உறுதியான பதிவு எதுவும் இல்லை. இதனால் இந்த இனம் அழிந்துவிட்டதோ எனக் கருதப்பட்ட நிலையில், 2026-ம் ஆண்டு மீண்டும் தென்பட்டிருப்பது ஆய்வாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பூச்சியை அடையாளம் காண உதவியது அதன் தனித்துவமான ஒளி வெளிப்பாடுதான். இரவு நேரத்தில் 10 முதல் 20 முறை வேகமாக அம்பர் நிறத்தில் ஒளிர்ந்துவிட்டு, சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒளிரும் தன்மையை ஆய்வாளர் கவனித்தார். பின்னர் நுண்ணோக்கி மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும், இது 1983-ம் ஆண்டில் கடைசியாகப் பதிவு செய்யப்பட்ட அதே வகை மின்மினிப் பூச்சி என்பது உறுதி செய்யப்பட்டது.
நகரமயமாக்கல், இயற்கையான வாழ்விடங்கள் அழிக்கப்படுவது, செயற்கை விளக்குகளின் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் மின்மினிப் பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குறிப்பாக நீர்நிலைகளுக்கு அருகில் இயற்கையாக வளர்ந்த புல்வெளிகள் இந்த வகைப் பூச்சிகள் வாழ்வதற்கு ஏற்ற இடங்களாக உள்ளன. அமெரிக்கா மற்றும் கனடாவில் இதுபோன்று காணாமல் போனதாகக் கருதப்படும் மேலும் 28 வகை மின்மினிப் பூச்சிகள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தப் புதிய கண்டுபிடிப்பு அவற்றையும் மீண்டும் கண்டறிய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
