ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நேற்று டிசம்பர் 4-ஆம் தேதி பிரஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 334 ரன்களுக்கு சுருண்டது.
வரலாற்று சாதனை நிகழ்த்திய மார்னஸ் லாபுஷேன் :
இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக ஜோ ரூட் 138 ரன்களையும், துவக்க வீரர் ஜாக் கிராவ்லி 76 ரன்களையும் குவித்தனர். ஆஸ்திரேலியா அணி சார்பாக முதல் இன்னிங்சில் அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்சல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார்.
அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணியானது போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 378 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் தற்போதைய நிலையில் 44 ரன்கள் முன்னிலையுடன் நாளைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி விளையாட இருக்கிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆஸ்திரேலிய அணி சார்பாக மூன்றாம் இடத்தில் களமிறங்கி விளையாடிய அந்த அணியின் நட்சத்திர வீரரான மார்னஸ் லாபுஷேன் பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் முதல் சர்வதேச வீரராக வரலாற்று சாதனை ஒன்றினை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.
அந்த வகையில் இன்றைய போட்டியில் விளையாடிய மார்னஸ் லாபுஷேன் 78 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் அடித்த இந்த 65 ரன்கள் மூலம் பகல் இரவு டெஸ்ட் போட்டிகளாக நடைபெறும் ஆட்டங்களில் மட்டும் 1000 ரன்களை பூர்த்தி செய்துள்ளார்.
இப்படி பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்களை பூர்த்தி செய்யும் முதல் சர்வதேச வீரர் இவர்தான் என்ற வரலாற்று சாதனையை மார்னஸ் லாபுஷேன் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நடைபெற்ற ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
