Web team
கம்பர் போல தமிழ் எழுத்தால் எழுதல் காப்பே!
கவிஞர் இரா. இரவி!
******
கம்ப இராமாயணத்தில் கம்பர் எழுதினார்
கன்னித்தமிழ் எழுத்தில் இலக்குவன் என்று !
வடமொழி எழுத்துக்களைப் பயன்படுத்தவில்லை
வடமொழி தொல்லை என்பதை அறிந்தவர் கம்பர் !
வடமொழியிலிருந்திருந்த வால்மீகி இராமாயணத்தை
வழிமொழிந்த போதும் தமிழ்மொழியைப் பயன்படுத்தினார்!
கம்பன் பயன்படுத்தாத வடமொழி எழுத்தை
கொம்பன்கள் பயன்படுத்துகின்றனர் கொம்பை முறிப்போம்!
வேண்டுமென்றே வடமொழி எழுத்தைத் திணிக்கின்றனர்
வாய்பிழந்து ஏமாந்து நிற்கின்றான் தமிழன்!
கிரந்த எழுத்துக்களை தமிழா நீக்கிடு
காந்த எழுத்துக்களை தமிழையே பயன்படுத்திடு!
உணவில் கலப்படம் உடலுக்குக் கேடு
உன்னத மொழியில் கலப்படம் மொழிக்குக் கேடு!
நல்ல தமிழ்ச்சொற்கள் இருக்கையிலே
கெட்ட கிரந்தச் சொற்கள் எதற்கு?
கனி போன்ற கன்னித்தமிழ் இருக்கையில்
காய் போன்ற கிரந்த எழுத்துக்கள் எதற்கு?
பெருந்தன்மையோடு கிரந்தம் கலந்து வந்தால்
பைந்தமிழ் அழிந்துவிடும் அறிந்திடு தமிழா!
உலகின் முதன்மொழியை உருக்குலைய விடலாமா?
உணர்வின்றித் தமிழா எருமையாக இருப்பதேன்?
தனித்தமிழ் ஆர்வலர்கள் சொல்லி வருவதற்கு
தமிழர்களுக்கு செவிமடுத்து திருந்திட வேண்டும்!
எழுத்திலும் பேச்சிலும் தமிழே இருக்க வேண்டும்
எழுத்திலும் பேச்சிலும் கிரந்தம் வேண்டவே வேண்டாம்!
இப்படியே வளர்விட்டால் என்னாவாகும் தமிழ்
என்பதை எண்ணிப்பார்த்து நீக்கிடு கிரந்தத்தை!
நல்ல தமிழையே நாளும் பயன்படுத்துவோம்
நீக்கிடுவோம் கேடு தரும் கிரந்த எழுத்துக்களை!.