வேரும் விழுதும்.

Estimated read time 1 min read

Web team

200px-Viceroy_Butterfly.jpg

வேரும் விழுதும்!

நூல் ஆசிரியர்கள் :
‘தமிழ்த்தேனீ’ பேராசிரியர் இரா. மோகன் !
‘தமிழ்ச்சுடர்’ பேராசிரியர் நிர்மலா மோகன் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

நூல் வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017.
பக்கங்கள் 144, விலை : ரூ. 120

******

இலக்கிய இணையர் தமிழ்த்தேனீ இரா. மோகன், தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் இருவரும் இணைந்து எழுதியுள்ள நூல் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களின் இறுதி நூல் இது. கனத்த இதயத்துடன் மதிப்புரை எழுதுகிறேன்.

இனிய நண்பர் இலண்டன் புதுயுகம் அவர்கள், அவரது தந்தை கள்ளப்பிரான், அவரது தந்தை இராமானுநுசக் கவிராயர் இப்படி மூன்று தலைமுறைக்கு சூட்டியுள்ள மகுடன் தான் இந்நூல். புலிக்குப் பிறந்த்து பூனையாகாது என்ற பொன்மொழிக்கு ஏற்ப வாழ்ந்து வரும் நண்பர் புதுயுகன். இலக்கிய மரம் அவரது வேர் விழுது படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் அவர்கள் விரிவான அணிந்துரை நல்கி உள்ளார். 7 கட்டுரைகளின் தொகுப்பாக நூல் உள்ளது. பின் இணைப்பாக கவிஞர் புதுயுகனின் தினமலர் நேர்காணலும் இலக்கிய இணையரின் நூல்களின் பட்டியல்களும் உள்ளன.

புதுயுகனின் தாத்தா இராமானுசக்கவிராயர் காந்தியவாதி மட்டுமல்ல, ஒன்பது வயதில் பாடிய வள்ளலார் போல, கவிராயரும் கவி பாடி உள்ளார். உரையாசிரியராகவும் இருந்துள்ளார். அவரது பன்முக ஆற்றலை படம்பிடித்துக் காட்டி உள்ளனர் நூல் ஆசிரியர்கள் இலக்கிய இணையர்கள். கவியரசர் பாரதியாருக்கும், கவிராயர் இராமாநுசருக்கும் இடையே உள்ள ஒற்றுமைப் பண்புகளை விளக்கி உள்ளனர்.

ஒரே நூலில் மூன்று தலைமுறை ஆளுமைகளின் ஆற்றலை, சிறப்பியல்பை, நற்குணத்தை எடுத்தியம்பி இன்றைய இளைய தலைமுறையினருக்கு எப்படி வாழவேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக நூலைப் படைத்து உள்ளனர்.

“புதுயுகன் பாரதியும், பாவேந்தரும் சரிவிகிதத்தில் சேர்ந்தமைந்த கூட்டுக்கிளி” சரியான கணிப்பு. இனிய நண்பர் புதுயுகனின் பல நூல்களுக்கு மதிப்புரையும் ஒரு நூலிற்கு அணிந்துரையும் எழுதியவன் என்ற முறையில் அவரது படைப்பாற்றல் பற்றி நன்கு அறிவேன்.

நிலவில் குளித்து எழுந்தது போலே
நிலவும் இன்ப நினைவே கவிதை!

(மழையின் மனதிலே ப.82)

கவிதை குறித்து மிக நுட்பமான விளக்கம். ரசனை மிக்க விளக்கம். கவிதைக்கு இப்படி ஒரு இலக்கணம் இதுவரை யாரும் கூறியதில்லை. புதுயுகன் பெயருக்கு ஏற்றபடி புதுவிதமாக சிந்தித்து வடித்த கவிதை நன்று.

வாழ்க்கை உன்னை
கசக்கிப் போட்டாலும்
மனதை அழகாக மடித்து வை
நாளைய பட்டுத்துணி நீயாகலாம்”

(மழையின் மனதிலே ப.87)

‘துன்பத்திற்கு துவண்டு விடாதே, கவலை கொள்ளாதே, துணிவுடன் வாழ்க்கையை எதிர்கொள்’ என்று தன்னம்பிக்கை விதைக்கும் வைர வரிகள்.

கவிஞர் புதுயுகன் படைப்பு யாவும் சிறப்பு. இருப்பினும் ஆகச்சிறந்த கவிதைகளை மேற்கோள் காட்டி, இலக்கிய இணையர் சிற்பி சிலை வடிக்கும் நுட்பத்துடன் செதுக்கு உள்ளனர்.

வாழும் காலத்திலேயே இலண்டன் மாநகரில் வாழும் இனிய நண்பர் கல்வித்துறைத் தலைவர் துணை முதல்வர் என்ற பதவி வகித்து இலக்கியத்தில் இனிய முத்திரை பதித்து வரும் கவிஞர் புதுயுகன் அவர்களுக்கு சூட்டியுள்ள மணிமகுடமே இந்த நூல். இந்த நூலை இலக்கிய இணையர் இலண்டன் தமிழ்ச்சங்கத்தில் வெளியிடுவதாக இருந்தது. ஆனால் அதற்குள் இயற்கை தமிழ்த்தேனீ இரா. மோகன் அய்யாவின் உயிரை இரக்கமின்றி பறித்து சென்று விட்டது.

இந்த நூல் படிக்கும் போது அய்யாவைப் பற்றிய மலரும் நினைவுகளும் மனக்கண்ணில் வந்து போயின.

கவிஞர் புதுயுகன் தன் கவிதையில் குறிப்பிட்டுள்ள 11 வகையான முத்தத்திற்கும் விளக்கம் சிறப்பு. ஞானமுத்தம், இறைவனின் முத்தம், அரவணைப்பு முத்தம், செல்ல முத்தம், கடலலை முத்தம், மின்சார முத்தம், முத்திரை முத்தம், பாரதியார் முத்தம், பேய் முத்தம், அகஅழகான முத்தம். முத்தம் இத்தனை வகையா வியந்து போனேன். பாராட்டுக்கள்.

ஹைக்கூ கவிதை பற்றி பலரும் விளக்கம் சொல்லி உள்ளனர். மூன்று வரி இரண்டு காட்சி ஒரு வியப்பு என்பார் எழுத்தாளர் சுஜாதா. மெல்லத் திறந்த்து கதவு என்பார் கவிக்கோ அப்துல் ரகுமான். மூன்றுவரி முத்தாரம் என்பேன் நான். கவிஞர் புதுயுகன் ஹைக்கூ பற்றி எழுதிய ஹைக்கூக்கள் மிகச் சிறப்பு.
[

இரண்டு மின் அலைகள்
ஒரு மின்னல்
ஹைக்கூ!

மூன்றே துளிகள்
ஒரு கடல்
ஹைக்கூ!

கவிஞர் புதுயுகன் மரபு புதிது ஹைக்கூ என மூன்று வகை பாக்கள் மட்டுமல்ல. சிறந்த நாவலாசிரியராக நாவலும் எழுதி உள்ளார். நாவலின் சிறப்பையும் எடுத்து இயம்பி எழுதி உள்ளனர்.

தன்னம்பிக்கை நூல் வரிசையில் ஒரு புதிய தடம் பதித்த நூலான “கனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை” என்ற நூல் பற்றிய மதிப்புரையும் நூலில் உள்ளது. இந்த நூல் வெளியீட்டு விழா மதுரை நியூ காலேஜ் ஹவுஸ் மணிமொழியனார் அரங்கில் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் தான் முன்நின்று நடத்தினார்கள். நானும் விழாவில் பங்கெடுத்து வாழ்த்தினேன். எழுத்துவேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களும் நூலைப் பாராட்டினார். மிக்ச்சிறந்த ஆளுமைக்குச் சூட்டியுள்ள மணிமகுடமே இந்நூல்.

Please follow and like us:

You May Also Like

More From Author