நிரந்தர போர் நிறுத்தம் செய்ய சம்மதித்தால் மட்டுமே, பிணைக் கைதிகளை விடுவிக்க முடியும் என்று ஹமாஸ் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி அப்பாவி மக்களை கண்மூடித்தனமாகச் சுட்டுக்கொன்றனர்.
மேலும், வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். இத்தாக்குதலில் இஸ்ரேல் நாட்டில் 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும், 3,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதையடுத்து, இஸ்ரேல் பதிலடித் தாக்குதலைத் தொடங்கியது. முப்படைகளையும் ஏவிவிட்டு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காஸா நகரமே உருக்குலைந்து போய்க் கிடக்கிறது. ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம், சுரங்கப் பாதைகள், தீவிரவாத முகாம்கள் ஆகியவற்றையும் இஸ்ரேல் இராணுவம் தரைமட்டமாக்கியது.
இஸ்ரேலின் இந்த ஆக்ரோஷமான தாக்குதலில் நூற்றுக் கணக்கான ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 21,000 பாலஸ்தீனியர்கள் பலியாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், 40,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதோடு, காஸா நகரில் குடிநீர், மின்சாரம், மருந்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கூட கிடைக்கவில்லை.
எனவே, மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்தும்படி உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன. அதேபோல, ஐ.நா. சபையும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அனைத்துக் கோரிக்கைகளையும் இஸ்ரேல் நிராகரித்து விட்டது. ஹமாஸ் தீவிரவாதிகளை வேரோடு அழிக்கும் வரை போர் நிறுத்தம் இல்லை என்று தெரிவித்திருக்கிறது.
இதனிடையே, கத்தார், எகிப்து நாடுகளின் உதவியுடன் பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்படி, கடந்த நவம்பர் மாதம் 7 நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. அப்போது, 100 பிணைக் கைதிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் விடுவித்தனர். பதிலுக்கு இஸ்ரேல் 300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன சிறைக் கைதிகளை விடுவித்தது.
இதன் பிறகு, மீண்டும் போர் தொடங்கி இருக்கிறது. இஸ்ரேல் இராணுவத்தினர் ஹமாஸ் தீவிரவாதிகளை தேடித் தேடி அழித்து வருகின்றனர். இஸ்ரேல் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஹமாஸ் தீவிரவாதிகள் திணறி வருகின்றனர். இதனால், தீவிரவாதிகள் பலரும் இஸ்ரேல் இராணுவத்திடம் சரணடைந்து வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க, மீதமுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க கத்தார், எகிப்து உதவியுடன் அமெரிக்கா தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இந்த சூழலில்தான், நிரந்தர போர் நிறுத்தம் செய்தால் மட்டுமே, பிணைக் கைதிகளை விடுவிக்க முடியும் என்று ஹமாஸ் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்திருக்கிறார்கள்.
அதேசமயம், இஸ்ரேல் இராணுவமோ ஹமாஸ் தீவிரவாதிகளின் நிபந்தனையை பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. வழக்கம்போல தாக்குதலை தொடர்ந்து வருகிறது.