வடகொரியா புதிய திட எரிபொருள் நடுத்தர தொலைவு ஹைதபர்சோனிக் ஏவுகணையை, வெற்றிகரமாக சோதனை செய்ததாக, அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கு சர்வதேச நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அமெரிக்கா, தென்கொரியா இணைந்து பல்வேறு தடைகளை விதித்த போதிலும், வடகொரியா அதைக் கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து, ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது.
இந்நிலையில், வடகொரியா புதிய திட எரிபொருள் நடுத்தர தொலைவு ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை செய்துள்ளது. இதனை வட கொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, வட கொரியா தனது கிழக்கு கடற்பகுதியில் இருந்து, ஏவுகணை ஏவி சோதனை செய்ததாக தென் கொரியா மற்றும் ஜப்பான் ராணுவத்தினர் கூறிய நிலையில், அதனை உறுதி செய்யும் வகையில், வடகொரியா அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மேற்பார்வையில், ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக, அந்நாட்டு அரசு ஊடகம் கூறியிருக்கிறது. ஹவாசாங்-16 பி என பெயரிடப்பட்ட இந்த ஏவுகணையானது, அணு ஆயுதப் போரை திறம்பட சமாளிக்கும் முக்கிய ஆயுதம் என கிம் ஜாங் உன் கூறியுள்ளார்.